ஏழை ஜாதி பட ஷூட்டிங்கில் அழுத குழந்தை.. பதறிய விஜயகாந்த்.. கேப்டன் செய்த நெகிழ்ச்சி செயல்
சென்னை: ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கு ஏதாவது ஒன்று என்றால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதறி போய் ஷூட்டிங்கை நிறுத்தி அவர்களது பிரச்சினையை தீர்த்துவிட்டுத்தான் நடிக்கவே தொடங்குவார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவருடைய உடலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தேமுதிக தொண்டர்கள், வருகை தந்தனர். சாரை சாரையாக கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இடம் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து அவருடைய உடல் தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்தில் இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு வரப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். வழியெல்லாம் விஜயகாந்தின் உடலுக்கு பூமழை பொழிந்தது. விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவும் இல்லை.
அரசியலில் அவர் கடந்த சில ஆண்டுகளாக ஆக்டிவ்வாகவும் இல்லை,. அவருடைய கட்சி 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு வெற்றி பெறவே இல்லை. இருந்தாலும் அவரது இறப்புக்கு இத்தனை கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது கேப்டனின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த நிலையில் அவரது உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டு மண் தூவி, மலர்த் தூவி 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இனி எந்த உடல்நிலை பிரச்சினையும் இல்லாமல் தனக்கு பிடித்தமான இடத்தில் துயில் கொள்கிறார் கேப்டன் விஜயகாந்த்.
இந்த நிலையில் விஜயகாந்த் குறித்த நினைவலையில் நடிகர் வின்சென்ட் ராய் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சத்ரியன், ஏழை ஜாதி உள்ளிட்ட ஏழு படங்களில் கேப்டனுடன் நடித்துள்ளேன். ஏழை ஜாதி படத்தில் பல துணை நடிகர்களுடன் சைதாப்பேட்டை பாலத்தை இவர் கடந்து செல்லும் காட்சி. அப்போது மதிய வெயில் நேரம்.
அப்போது சில அடிகள் பின்னே குழந்தை அழும் சத்தம். உடனே ஷூட்டிங்கை நிறுத்த சொன்னார். விசாரித்ததில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்த பெண்ணின் குழந்தை அது என தெரிய வந்தது. அவரை அழைத்து 'குழந்தையை வைத்துக் கொண்டு இந்த வெயிலில் ஏன் வந்தீர்கள்?' எனக்கேட்டார். '350 ரூபாய் தருவதாக சொன்னார்கள். அதனால் வந்தேன்' என்றார்.
உடனே மேனேஜரை அழைத்து 'இந்தம்மாவிற்கு இனி ஷூட்டிங் உள்ள நாட்களில் நித்தம் 1,000 ரூபாய் கொடுங்கள். வெயிலில் நடிக்க வைக்க வேண்டாம்' எனக்கூறிவிட்டு தனது உதவியாளரை அழைத்தார். 'கைப்பையில் என்ன இருக்கிறது? எனக்கேட்க 'உங்களுக்காக பிஸ்கட் மற்றும் ஜூஸ் வைத்திருக்கிறேன்' என்றார்.
'அதை அந்தம்மா கிட்ட குடு. அவங்களை நிழல் இருக்கற இடம் பாத்து தங்க வை' எனக்கூறிவிட்டு படப்பிடிப்பை தொடர்ந்தார். ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு சிரமம் ஏற்பட்டால் உடனே படப்பிடிப்பை நிறுத்தி, அதை சரி செய்துவிட்டுத்தான் மீண்டும் நடிப்பார். இப்படி சினிமாவில் எந்த ஹீரோவும் செய்வதில்லை என நடிகர் வின்சன்ட் ராய் கூறினார்.












Click it and Unblock the Notifications