அணில் மாதிரி உதவி செய்யலாமேனு.. பாஜகவில் இணைந்தது ஏன்? நடிகை கஸ்தூரி கொடுத்த விளக்கம்!
சென்னை: பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக ஒரு அணில் மாதிரி நமது பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவில் இணைந்ததாக நடிகை கஸ்தூரி விளக்கம் கொடுத்துள்ளார். திமுகவினர் தன்னை சங்கி, சங்கி என்று கூறி வந்ததாக கூறிய அவர், சங்கி என்பதை பெருமையாக சுமந்துவிடலாம் என்று நினைத்து பாஜகவில் இணைத்துக் கொண்டதாகவும் கூறி இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நடிகை கஸ்தூரி, இன்று தன்னை நயினார் நாகேந்திரன் முன்பாக பாஜகவில் இணைத்துக் கொண்டார். பாஜகவுக்கு ஆதரவாக கடந்த முறை வாக்கு சேகரித்த அவர், நேரடியாக பாஜகவில் இணைவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்பாக கஸ்தூரில் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் அதிமுக வலுவாக இருக்கும் நிலையில், தவெக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக இருக்கிறது. இருப்பினும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவில் கஸ்தூரி இணைந்திருக்கிறார். இந்த நிலையில் பாஜகவில் இணைந்தது ஏன் என்பது தொடர்பாக நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 79வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் தமிழ்நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை.. பெண்களுக்கு சுதந்திரம் இல்லை.. உயிர் வாழ்வதற்கு கூட வாய்ப்பில்லாத சூழல் இல்லாமல் உள்ளது. சமீப காலங்களில் நடந்த சம்பவங்கள் எனக்கு கோபத்தை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதற்காக நாம் குரல் கொடுக்கும் போது, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள், திமுக கூட்டணிக் கட்சியினரிடம் இருந்துதான் வந்தது. குறிப்பாக என்னை சங்கி என்று விமர்சித்தார்கள்.
என்னை சங்கி, சங்கி என்று சொல்ல சொல்ல, திமுக எதிர்ப்பு என்பது பாஜக தான் என்று எனது தலையில் அவர்கள் ஏற்றிவிட்டார்கள். அதனால் நயினார் நாகேந்திரனை சந்தித்து எனது மக்கள் பணியை சுதந்திரமாக செய்வதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரினேன். அதற்கு அவர், இதனை தானே பல நாட்களாக கேட்கிறோம் என்று கூறினார். எங்களின் சிந்தனை ஒரே கோட்டில் இணைந்தது.
அதனால் பாஜகவில் இணைந்துள்ளேன். கட்சி அரசியலே செய்யக் கூடாது என்றே இருந்தேன். கட்சி சார்பின்றி இயங்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் இவர்கள் கட்சி சாயம் பூசிவிடுகிறார்கள். எல்லோருக்கும் அரசியல் சாயம் பூசப்படுவதால், அந்தப் பெயரை பெருமையாகவே சுமந்துவிடலாம் என்று நினைத்து பாஜகவில் இணைந்துவிட்டேன்.
அதேபோல் ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக, ஒரு குடிமகளாக ஏதாவது ஒரு வகையில் பாஜகவுக்கு அணில் மாதிரி பணியாற்ற வேண்டும் என்று தோன்றியது. இதுவும் முக்கியமான காரணம் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகை கஸ்தூரி இணைந்திருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
