எத்தனை முறை வழக்கு தொடர்வீர்கள்?.. நேரம் கேட்பீர்கள்.. பன்னீர் செல்வம் தரப்பை விளாசிய நீதிபதி
சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த எடப்பாடி பழனிச்சாமி தடை கோரிய வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மேலும் மேலும் கால அவகாசம் கேட்கவே, எரிச்சலான நீதிபதி, எத்தனை முறை இந்த விவகாரத்தில் இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளரானார் சசிகலா. அவர் முதல்வராக ஆசைப்பட்ட அதே நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவே, பெங்களூரு சிறை சென்றார் சசிகலா. அதே நேரத்தில் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவினால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றிணைந்து கட்சியை கைப்பற்றியதோடு ஆட்சியையும் சிக்கலின்றி நடத்தி முடித்தனர்.

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவோ, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது கார சாரமான விவாதங்கள் நடந்து முடிந்து தீர்ப்புகாக காத்திருக்கிறது.
2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தலை சந்தித்த அதிமுக திமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்து எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவினர் தோல்வியடையவே கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை இறுதி செய்ய அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் 2022 ஜூன் 14 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பேசினர்.
அன்றைய தினம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான விதை தூவப்பட்டது. ஒற்றைத்தலைமை என்ற வார்த்தையை சொல்லி நெருப்பை பற்ற வைத்தவர் ஜெயக்குமார்.
முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மூத்த நிர்வாகிகள் என பலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நின்றனர். ஆள் ஆளுக்கு ஊடகங்களில் பேச அதிமுகவின் அதிகார சண்டை ஊடகங்களில் பேசு பொருளானது.
மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிகம் இருந்ததால், பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், அந்த கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என பழனிச்சாமி தரப்பு தெரிவித்தது.
இதற்கிடையே பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அமர்வு ஜூன் 22 ஆம் தேதி சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி வீட்டில் இரவு முழுவதும் விசாரித்து அதிகாலையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில்,அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டனர்.
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிருப்தி அடைந்தது. ஜூன் 23ஆம் தேதி அ.தி.மு.கவின் பொதுக் குழு நடந்த அரங்கில் பெரும்பான்மையான பொதுக் குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் இருந்தனர். இதனால் பொதுக்குழுவுக்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்தும், எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தும் எழுப்பப்பட்டன. பொதுக்குழு கூடிய சில நிமிடங்களில் ஆக்ரோஷமாக எழுந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஓ.பன்னீர் செல்வம் கொண்டு வந்த பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக தெரிவித்தார். அதோடு ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்தும் பேசினார். இதனால் ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்ணன் தம்பி சண்டை பேசி முடிக்கலாம் என்று திட்டமிட்டவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அதை தொடர்ந்து அவைத்தலைவராக தமிழ் மகன் ஹுசேன் பெயரை எடப்பபாடி பழனிசாமி முன்மொழிய பொதுக்குழுவால் அவைத்தலைவராக தமிழ் மகன் ஹுசேன் தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு மீண்டும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பொதுக்குழு மேடையில் இருந்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என பகிரங்கமாக கூறி வெளியேறினர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அதிமுக ஒருங்கிணைப்பாளராக அதுவரை இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் மீது பாட்டிலை வீசினார். உச்சபட்ச அவமானத்தோடு கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர்.
ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதை தொடர்ந்து உச்ச நிதிமன்றம் என தொடர்ந்து சட்ட போராட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 28 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆனாலும் ஓ.பன்னீர் செல்வம் தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி அதிமுகவின் கட்சி, கொடி, சின்னத்தையும் லெட்டர் பேடையும் பயன்படுத்தி வருகிறார்.
அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
இந்த வழக்கு இந்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது, இதுவரை பதில் மனுதாக்கல் செய்யவில்லை, தன்னை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினார்கள், ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் தாகல் செய்த வழக்கு நம்பர் ஆகிவிட்டது, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம், குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைக்கேட்ட நீதிபதி சதீஷ்குமார், எத்தனை முறை இந்த விவகாரத்தில் இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனைமுறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நான்கைந்து மாதங்களில் முக்கியமான எம்.பி தேர்தல் வரவுள்ளது, ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக அதே பதவியை பயன்படுத்துகிறார், எங்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிக்கிறார், பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என வாதிடப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி சதீஷ்குமார், பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
பொன்விழா கண்ட கட்சியான அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு முன்பு அவரது மனைவி ஜானகியும், ஜெயலலிதாவும், கட்சி, சின்னம், கொடிக்காக நீதிமன்ற படியேறினர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சி, சின்னம், கொடி முடக்கப்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் ஒன்றிணையவே மீண்டும் சின்னமும், கொடியும் கட்சியும் கிடைத்தது. தற்போது அதிமுக என்ற கட்சிக்காகவும், சின்னத்திற்காகவும், கொடிக்காகவும் நீதிமன்றத்தில் மல்லுக்கட்டி வருகின்றனர். இதனையடுத்தே எத்தனை முறை வழக்கு தொடுப்பீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவில், அதிமுகவின் கொடி, இரட்டை இலை சின்னம்,லெட்டர் பேட் ஆகியவற்றை ஒ.பன்னீர் செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வத்தின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து அதிமுகவை மொத்தமாக தனது வசப்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications