"நீட் விவகாரத்தில் மசோதாவை விட சிறந்த தீர்வு இது தான்.." விளக்கும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
சென்னை: நீட் விலக்கு விவகாரத்தில் சட்ட மசோதா எடுத்து முயற்சி செய்யலாம் என்றாலும் கூட உண்மையான தீர்வு அதுவல்ல என்று தெரிவித்துள்ள முன்னாள் அதிமுக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இது தொடர்பாக விளக்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் நீட் மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனப் பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அரசியல் தளத்தில் கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக அரசு இருந்த போதே, நீட் மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டது.

நீட் விலக்கு
இருப்பினும், அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.. இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் நீட் விலக்கு கோரி திமுக அரசு புதிய மசோதாவைத் தமிழ்நாடு சட்டசபையில் கடந்த செப். 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில், இது தொடர்பாக ஆளுநர் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்தார்.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
ஆளுநர் இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இந்தச் சூழலில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.வரி திருப்பி அனுப்பினார். நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக உள்ளதாகவும் நீட் தேர்வு சமூக நீதியைக் காப்பதாகவும் ஆளுநர் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம்
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை காட்டிலும் உச்ச நீதிமன்றம் மூலமே இதில் தீர்வு பெற முடியும் என்று அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நீட் விலக்கு தேவை என்பது தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒரு நிலைப்பாடு. நாங்கள் ஆட்சியில் இருந்த போதும் சரி. இப்போதும் சரி சொல்வது ஒன்று தான். நீட் விவகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் வழியாக மட்டுமே தீர்வு காண முடியும். அது மட்டுமே ஒரே தீர்வு.

குறைகளைச் சரி செய்து
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இப்போது திருப்பி அனுப்பியுள்ளார். சட்ட மசோதாவைத் திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. இதற்கு ஆளுநர் கூறியுள்ள கருத்துகளை நாம் ஆராய வேண்டும். ஆளுநர் கூறிய கருத்துகளை ஆராய்ந்து, அதில் எதாவது குறைபாடுகள் இருந்தால் மீண்டும் அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்

புதிய சட்ட நுணுக்கங்கள் இல்லை
எங்கள் அரசு நீட் விலக்கு கோரி நிறைவேற்றி அனுப்பிய, தீர்மானத்தைக் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியிருந்தார். ஆனால், அதற்கான காரணத்தைக் குடியரசுத் தலைவர் கூறவில்லை. நாங்கள் நிறைவேற்றிய அதே மசோதாவைத் தான், இந்த அரசும் நிறைவேற்றி அனுப்பியிருந்தது. ஒரே வித்தியாசம் தான் இருந்தது. இவர்கள் குழு அமைத்திருந்தார்கள். அந்த குழுவின் பரிந்துரைப்படி சட்டங்கள் இயற்றப்பட்டதாகக் கூறிருந்தனர். மற்றபடி புதிய காரணங்களோ அல்லது புதிய சட்ட நுணுக்கங்களைச் சேர்த்து நீட் விலக்கு மசோதாவைத் தயாரிக்கப்படவில்லை.
Recommended Video

ஒரே தீர்வு
தமிழக சட்டசபையில் இது தொடர்பான மசோதாவைத் தயார் செய்து நீட் விலக்கு பெற முயலலாம். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் மூலம் விலக்கு பெறுவது தான் இதற்கான ஒரே வழி. மற்றதெல்லாம் சும்மா மக்களை ஏமாற்றும் வழிதானே தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தின் மூலம் நீட் விலக்கு பெறும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications