இந்த தடவையும் எடப்பாடி லேட்.. திமுகவில் இணைந்த மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கம்! வெளியான அறிக்கை
சென்னை: அதிமுகவிலிருந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரேயன் இன்று திடீரென திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் அதிமுக மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் பல மூத்த முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியடைந்த நிலையில் தங்கள் பகுதிகளில் வலுவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தோல்வியை சந்தித்தனர். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி உருவாகி இருக்கும் நிலையில் பல மூத்த முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திரும்பி இருக்கின்றனர்.

கட்சி தாவல்
மேலும் சிலர் கட்சி தாவும் மனநிலையில் இருக்கின்றனர். அதை ஒட்டியே கடந்த ஒரு மாதமாக கட்சி தாவல் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் சிறுபான்மை தலைவர்களின் முக்கியமானவருமான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருக்கு கலை இலக்கிய அணி மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை மன்னர் பரம்பரையைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
எடப்பாடி பழனிசாமி
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானது. மேலும் சில முன்னாள் அமைச்சர்களும் எம்பிக்களும் திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் இன்று அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயன் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் பரவியது தொடர்ந்து. சுமார் 10 மணி அளவில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்த அவர் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
முக ஸ்டாலின்
அவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் முயன்று வருவதாகவும், அதிமுக பாஜக வலையில் சிக்கித் தவிக்கிறது. கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை, டெல்லிக்கு கட்டுப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார், அதிமுக பாஜக கூட்டணியால் பலர் மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் எனக் கூறி இருந்தார்.
அதிமுகவிலிருந்து நீக்கம்
இந்த நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மைத்ரேயன் நீக்கப்படுவதாகவும், கட்சியின் கொள்கை குறிக்கோள் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் அனைத்து பதவிகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த முறை அன்வர் ராஜா மற்றும் கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தகவல் சென்றது. தற்போது மைத்ரேயனும் திமுகவில் இணைந்ததற்கு பிறகுதான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications