திடீரென நடந்த அதிமுக ‘மாஜி’ & ஆளுநர் மீட்டிங்.. டக்கென திரும்பிய தலைகள்.. புருவம் உயர்த்தும் திமுக!
அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி ராஜ் பவனுக்கு சென்று ஆளுநரைச் சந்தித்தார்.
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 250 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கே.சி.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீது இருக்கும் ஊழல் பட்டியலை விரைவில் ஆளுநரை சந்தித்து வழங்க இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவையும், எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்தையும் தொடர்ச்சியாக கடுமையாகத் தாக்கிப் பேசி வரும் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி இன்று ஆளுநர் ரவியை சந்தித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கேசி பழனிசாமி, ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸையும், அவர்கள் பாஜகவிற்கு அடிபணிந்து செயல்படுவதாகவும் விமர்சித்து வருகிறார்.

ஆளுநருடன் திடீர் மீட்டிங்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தான் அடிக்கடி சந்தித்து, திமுக அரசு மீதான புகார்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஆளுநரிடம் கொடுக்க உள்ளதாக கூறியுள்ளார் கேசி பழனிசாமி.

250 கோடி
இன்று ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கேசி பழனிசாமி, "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 250 கோடி ரூபாயை திமுக செலவு செய்துள்ளது. அதனை எதிர்த்துக் கேட்க வேண்டிய எடப்பாடி பழனிசாமியும் கேட்கவில்லை. தேர்தல் ஆணையமும் மத்திய அரசாங்கமும் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறை கூட எந்த விதமான ஆய்வையும் நடத்தவில்லை.

மிட்டா மிராசுகள்
பணப் பட்டுவாடாவை தற்போது தடுக்கவில்லை என்றால் அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலை தொடரும். பணம் வைத்திருப்போர் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் சூழல் உருவாகும். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். சாமானியன் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் அண்ணா கட்சி தொடங்கினார். ஆனால், இன்று மிட்டா மிராசுகள் மட்டுமே அரசியலுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

லிஸ்ட் கொடுப்பேன்
திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீது இருக்கும் ஊழல் பட்டியலை விரைவில் ஆளுநரை சந்தித்து வழங்க இருக்கிறேன். உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் எம்ஜிஆர் பக்கம்தான் இருக்கிறார்கள். வேறு யார் பக்கமும் இல்லை. அதிமுகவில் சாதி - மதம் இல்லை. அதிமுக அனைவருக்கும் பொதுவானது." என அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.

திரும்பிப் பார்க்கும் தலைகள்
ஆளுநரை அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி திடீரென சந்தித்துள்ளதால், அதுவும் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் சந்தித்துள்ளதை ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அதேபோல, திமுக ஊழல் பட்டியலையும் அளிப்பேன் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளது திமுக தரப்பிலும் புருவங்களை உயரச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications