கூட்டணிக்கு பறி போகும் சிட்டிங் எம்.பிக்களின் தொகுதிகள்.. உள்ளடி வேலைகளுக்கு ஏகபோக வாய்ப்பு
சென்னை: தற்போதைய அதிமுக எம்.பிக்கள் பலருக்கும் மீண்டும் சீட் கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது. இதனால் கோபமடைந்துள்ள சிட்டிங் எம்.பிக்கள் நிச்சயம் உள்ளடி வேலை பார்ப்பார்கள் என்பதால் எதிர்க்கட்சிகள் குஷியாகியுள்ளனராம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து களம்கண்டது. அப்போது வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட பெரும்பாலானோர் அந்த தொகுதி மக்களுக்கே அறிமுகம் இல்லாதவர்கள். தமிழகத்தில் நிறுத்தப்பட்ட 39 –வேட்பாளர்களில் 37 –பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றனர். இதற்கு பல்வேறு ஜெயலலிதாவின் ஆளுமை, மோடியா லேடியா என்று கேட்ட துணிச்சல், மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் மீதான வெறுப்பு என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.
இந்த நிலையில் இப்போதிருக்கும் சிட்டிங் எம்.பிக்கள் கிட்டத்தட்ட 18 பேர் தங்கள் தொகுதிகளை விட்டு தரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போதிருக்கும் அதிமுகவை ஜெயலலிதாவுக்கு முன் ஜெயலலிதாவுக்கு பின் என்று பிரிக்கலாம். ஜெயலலிதா இருந்தவரை கட்சி நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள் வரை யாரும் வாய் திறந்து பொது வெளியில் பேசமுடியாது.

பேச முடிகிறது
இப்போது நிலைமை அப்படி அல்ல, ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் கொண்டு சென்று விட்டார் என்று திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் உளறினாலும் பொது வெளியில் பேச முடிகிறது. ஆக இப்போது அதிமுகவில் பிள்ளைப் பூச்சியாக இருந்தவர்களுக்கு கூட தைரியம் வந்து விட்டது. இந்த நிலையில் இப்போது சிட்டிங் எம்.பி யாக இருப்பவர்கள் பலருக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது பிடிக்காத சூழலில் அவர்கள் தங்களது தொகுதிகளில் போட்டியிடவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

ராமதாஸ் மீதும் கடுப்பில்
இதில் பாமக பெல்டில் வரும் எம்.பிக்கள் பாமக மீதும் ராமதாஸ் மீதும் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் தங்கள் தொகுதியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ராமச்சந்திரன், மயிலாடுதுறை பாரதிமோகன், அரக்கோணம் திருத்தணி ஹரி, கடலூர் அருண்மொழித்தேவன், ஆரணி ஏழுமலை, சேலம் பன்னீர்செல்வம் இவர்கள் அனைவருமே வன்னியர் சமுதாய எம்.பி.க்கள். இதில் கடலூர், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், ஆரணி ஆகிய தொகுதிகளை பாமக குறிவைத்துள்ளது.

பாஜகவுக்கு 5
அது போல பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கன்னியாகுமரியில் மட்டுமே பாஜக சிட்டிங் எம்.பியாக உள்ளது. அது தவிர பாஜக போட்டியிடுவதாக யூகிக்கப்பட்டுள்ள தொகுதிகளான கோவை, திருப்போர், திருச்சி மற்றும் திருநெல்வேலி போன்ற தொகுதிகளிலும் சிட்டிங் எம்.பி.க்கள் தங்களது வாய்ப்பு பறிபோகிறது என்று புலம்ப கூடும். இவர்கள் அனைவரும் ஜெயலலிதா இருந்தபோது இருந்த மனநிலையோடு தேர்தல் பணியாற்றுவார்களா என்பது கேள்விக்குறியே.

ஜெ. வுக்கு அடங்கி
ஏன் எனில் ஜெயலலிதா தன் அமைச்சரவையில் இருந்தவர்களையே நினைத்தபோதெல்லாம் பந்தாடினார். இருந்தாலும் பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள் தங்களது அதிருப்தியை எந்த விதத்திலும் வெளிப்படுத்தியது இல்லை. ஜெயலலிதாவுக்கு அடங்கியே இருந்தனர். ஆனால் இப்போதைய நிலைமையே தலைகீழாக உள்ளது. ஆகவே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றுவார்களா என்பது சந்தேகமே.












Click it and Unblock the Notifications