நமீதா, குண்டு கல்யாணம், ஆர்த்தியை கைவிட்ட அதிமுக.. 'அம்மா' இருந்தா இப்படி நடக்குமா.. ஒரே புலம்பல்!
பிரச்சார வாய்ப்பு இல்லாமல் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் தவித்து வருகிறார்களாம்.
Recommended Video

சென்னை: "அம்மா இருந்தா எங்களை இப்படி விட்டுருப்பாங்களா.. எங்களை யாருமே கண்டுக்கலயே" என்று புலம்புகிறார்களாம் நட்சத்திர பேச்சாளர்கள்!
தேர்தல் திருவிழா என்றாலே அதை அலங்கரிப்பவர்கள் நட்சத்திர பேச்சாளர்கள்தான். இதில் சினிமா நடிகர், நடிகைகளும் அடக்கம். அதிலும் அதிமுகவில் இது அதிகமாக இருக்கும்!
கிராம பகுதிகளில் இந்த பேச்சாளர்களாலேயே கூடும் கூட்டம் ஏராளம்... விழும் வாக்குகளோ கணிசம்! தேர்தல் களைகட்டுகிறது என்றாலே இவர்கள் எல்லாரும் மைக்கை பிடித்து கொண்டு வந்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்!

அத்தாட்சி கடிதம்
தேர்தல் சமயத்தில் இவர்களை ஜெயலலிதா சரியாக பயன்படுத்துவார். அமைச்சர்கள், கட்சியின் 2-ம் கட்ட தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என பிரித்து, அவர்களுக்கான சுற்றுப்பயண விவரங்களை தயார் செய்து தேர்தல் ஆணையத்திடம் அத்தாட்சி கடிதத்தை பெறுவது ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கும்.

பிரச்சாரம்
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், "மாநிலம் முழுவதும் இவர்கள் என் கட்சி சார்பில் பிரச்சாரம் செய்வார்கள்" என்று ஒப்புதலை பெறுவதுதான்! இந்த அத்தாட்சி கடிதத்தை அனைத்து கட்சியினரும், அது சுயேச்சையாக இருந்தாலும் சரி... கண்டிப்பாக பெற வேண்டும்! அப்படித்தான் ஜெயலலிதாவும் இவர்களை பயன்படுத்தினார். முக்கியமாக, இவர்களிடம் எந்த பாரபட்சத்தையும் அவர் காட்டியதில்லை. எல்லோருக்குமே சரிசமமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவார்.

சிங்கமுத்து
நடிகர்கள் ராமராஜன், சிங்கமுத்து, நாஞ்சில் அன்பழகன், குண்டுகல்யாணம், நடிகைகள் விந்தியா, நமீதா, ஆர்த்தி என அந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் நீளும். ஆனால் இந்த முறை இவர்களுக்கு எல்லாம் வாய்ப்புகளே வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. தேர்தல் சமயங்களில் பிரச்சாரம் செய்வதால் மக்களிடையே பிரபலமாவதுடன், இதன்மூலம் குறிப்பிட்ட வருமானமும் வரும். ஆனால் இந்த முறை எல்லாமே மிஸ்ஸிங்!

ஆர்.சுந்தராஜன்
அதிமுக தரப்பில் வெறும் 2 பேருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவர் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன், மற்றொருவர் நிர்மலா பெரியசாமி! இதில் ஆர்.சுந்தர்ராஜன் என்ன பேசபோகிறார், எப்படி பேச போகிறார்? எதற்காக இவரை தேர்வு செய்துள்ளார்கள் என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை.

புலம்புகிறார்கள்
இருந்தாலும் வழக்கமாக பிரச்சாரம் செய்யும் ஸ்டார்கள் அனைவருமே மன வருத்தம் மற்றும் கொதிப்பில் இருக்கிறார்களாம். அம்மா வழியில் கட்சி நடத்துவதாக சொல்லும் இவங்க எங்களை ஏன் மறந்துட்டாங்க? அம்மா இருந்திருந்தா எங்களை இப்படி கைவிட்டிருப்பார்களா? என்று ஏக்கத்துடன் புலம்புகிறார்களாம்! ஒருவேளை நட்சத்திர பட்டாளங்களை பிரச்சாரத்தில் இறக்காவிட்டால் அதன்மூலம் ஏதாவது ஓட்டுக்கள் பிரிந்து விடுமோ என்றும் தொண்டர்களும் முணுமுணுக்கிறார்களாம்!












Click it and Unblock the Notifications