ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைகிறேன்.. எந்த பதவியும் எதிர்பார்க்கவில்லை.. அதிமுக மாஜி எம்பி அதிரடி
திமுகவில் இணைகிறார் மாஜி எம்பி பரசுராமன்
சென்னை: நான் அதிமுகவில் இருந்து விலகி தற்போது சிறப்பாக ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் விரைவில் இணைய உள்ளேன்.. எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் திமுகவுக்கு செல்லவில்லை என்று மாஜி எம்பி பரசுராமன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிமுகவின் செல்வாக்கு சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. உட்கட்சி பூசல்கள், சசிகலாவின் வருகை, இரட்டை தலைமை விவகாரங்களில் அக்கட்சி மேலிடம் தத்தளித்து வருகிறது.. இதனால் நிர்வாகிகள் எந்த பக்கம் போவது என்று தெரியாமல் விழித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான், கொடநாடு விவகாரமும், புளியந்தோப்பு கட்டிட விவகாரமும் பூதாகரமாக வெடித்து கிளம்பி உள்ளது..

அதிமுக
இதில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியும் கூடி உள்ளது.. எனவே, தங்களை காத்து கொள்ளவும், புகார் வழக்குகளில் தங்களை குற்றமற்றவர்களாக நிரூபிக்கும் முயற்சிகளில் அதிமுக மேலிடம் மும்முரமாகி உள்ளது. பாஜக தலைமையிடம் இது தொடர்பாக உதவி கேட்டும் அவர்கள் மறுத்துவிட்டதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது..

எடப்பாடி பழனிசாமி
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போதும், இப்படித்தான் பாஜகவை அதிமுக தரப்பு அதிகமாக நம்பி உள்ளதாக கூறப்படுகிறது.. எப்படியாவது நம்மை தோற்கடிக்க விடாமல் பாஜக அரசு பார்த்து கொள்ளும் என்று எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் நம்பிக்கை தந்ததால்தான், சசிகலா ஆதரவாளர்களான பலரும் சசிகலா பக்கம் சென்றுவிடாமல், எடப்பாடிக்காக விசுவாசம் காத்தனர். ஆனால், இப்படி மண்ணை கவ்வியது எடப்பாடிக்கே சற்று ஷாக்தான்.

சசிகலா
இதனால் அதிருப்தியாகி உள்ளவர்களில் பாதி பேர் சசிகலா பக்கமும்,தாவுகின்றனர்.. மீதம் உள்ளவர்கள் திமுக பக்கம் மாறி வருகின்றனர்.. அந்த வகையில்தான் பரசுராமன் திமுகவில் இணைவதாக கடந்த மாதம் செய்திகள் வந்தன.. அதிமுகவின் முன்னாள் எம்பி கு.பரசுராமன்.. தஞ்சை எம்பி தொகுதியின் கடந்த 2014 முதல் 2019 வரை எம்பியாக இருந்தவர்.. இவர், அதிமுகவில் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகவும் இருப்பவர்.. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார்.

பரசுராமன்
2014-ல் தஞ்சாவூர் எம்பி தொகுதியில் வைத்திலிங்கம் சிபாரிசில் சீட் வாங்கி பரசுராமன் வெற்றியும் பெற்றார். ஆனால், 2019-ல் அதிமுகவில் போட்டியிட மறுபடியும் சீட் கேட்டார்.. தஞ்சாவூர் தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்ததில், வைத்திலிங்கத்தின் பங்கு அதிகமாக இருந்ததாக அப்போது சொல்லப்பட்டது. அதனால், நடந்து முடிந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட பரசுராமன் வாய்ப்பு கேட்டிருந்தார்... ஆனால் தரவில்லை..

ஸ்டாலின்
உறுதியாக சீட் தருவதாக சொன்னவர்கள், கடைசி நேரத்தில் அறிவுடைநம்பிக்கு சீட் தந்துவிட்டார்கள்.. இதனால் ஷாக் ஆன பரசுராமன், தேர்தல் நேரத்தில் எந்தவித களப் பணியாற்றாமல் ஒதுங்கியே இருந்தார்... இதனால் வைத்திலிங்கத்துக்கும் பரசுராமனுக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த மாதம் செய்தியாளர்களை திடீரென சந்தித்தார் கு.பரசுராமன்.. அப்போது, திமுகவின் தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து ஆட்சி சிறப்பாக உள்ளது என்று பேட்டியும் தந்தார்.

மாஜி எம்பி
ஒரு மாஜி அதிமுக எம்பி இப்படி ஸ்டாலினை பாராட்டியது பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது.. மீடியாக்களிலும் பெருத்த விவாதமானது.. இதற்கு பிறகு மறுநாளே, பரசுராமன் தனது ஆதரவாளர்களோடு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தார்.. அங்கு மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன், ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து அரை மணி நேரமும் பேசினார்...

திமுக ஆபீஸ்
திமுக ஆபீசுக்கு பரசுராமன் வந்தது மேலும் சந்தேகத்தை கிளப்பியிருந்தது.. திருவையாறு எம்எல்ஏ தலைமையில் திமுகவில் சேருவதற்காக மாவட்ட செயலாளரிடம் நேரம் கேட்டுதான் கட்சி ஆபீசுக்கு பரசுராமன் தனது ஆதரவாளரோடு அப்போது வந்ததாகவும் கூறப்பட்டது.. அதனால்தான் எந்நேரமும் இவர் திமுகவில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

நலத்திட்டம்
இந்நிலையில், திடீரென செய்தியாளர்களை சந்தித்து பரசுராமன் பேட்டி தந்துள்ளார்.. அப்போது அவர் சொன்னபோது, 5 ஆண்டுகாலம் தஞ்சை தொகுதியின் எம்பியாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.. தஞ்சை ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி, சாலை பணி, பெரியகோவிலில் இருந்து சிவகங்கை பூங்கா வரை புதுப்பிக்கும் பணிக்கு முதல் தவணையாக ரூ.70 லட்சம் நிதி பெற்றுத்தந்தது, என 5 ஆண்டுகளில் 527 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொடுக்கல் - வாங்கல்
இந்த பணிகளை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல, அதிமுக. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் விடவில்லை. அவரும் மக்களிடம் எடுத்து சொல்லவில்லை... எனக்கும், அவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் எதுவும் கிடையாது... இதனால் நான் அதிமுகவில் இருந்து விலகி தற்போது சிறப்பாக ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் விரைவில் இணைய உள்ளேன்.. எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் திமுகவுக்கு செல்லவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications