9 மாதங்களுக்கு பிறகு கரூர் செல்கிறார் விஜய்.. கூட்ட நெரிசலில் பாதித்த குடும்பத்தினருடன் சந்திப்பு
சென்னை: முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகிற ஜூலை 10 ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுடன் கலந்துரையாடவும் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
தவெக கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அதில் முக்கியமானது கரூர் சம்பவம். கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் சென்றிருந்தார். விஜயை காண்பதற்காக அதிகளவு மக்கள் கூடியிருந்தனர். அப்போது கரூரில் எதிர்பாராதவிதமாக நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்பாவி மக்களின் துயரம் இப்போதும் ஆறாத ரணமாக உள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக விஜய், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாது தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கரூர் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
ஆனால் தவெக தலைவர் விஜய் கரூர் செல்லவில்லை. சம்பவம் நடைபெற்றவுடன் அங்கிருந்து ஆறுதல் சொல்லாமல் விஜய் அவசர அவசரமாக சென்னை சென்றார். தவெக இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட கரூர் சென்று ஆறுதல் சொல்லவில்லை. இது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கடந்த 2025 அக்டோபர் மாதம், விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரம் அழைத்து சந்தித்தார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதி வழங்கியிருந்தார்.
விஜய் 2 நாட்கள் பயணம்
அப்போது, விரைவில் கரூருக்கு நேரில் வந்து சந்திப்பேன் என்றும் அவர் உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகியுள்ளார். இந்நிலையில் விஜய் வருகிற ஜூலை 10 ஆம் தேதி கரூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 நாட்கள் பயணமாக விஜய் கரூர் செல்லவுள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை விஜய் தொடங்கி வைக்கிறார்.
மேலும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். விஜய்யின் கரூர் பயணம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications