ரூ.30,000 கோடி ஏங்கே? அதை ஏன் மறந்தீங்க? நிர்மலா சீதாராமனை தொடர்ந்து உதயநிதியை தாக்கிய அண்ணாமலை
சென்னை: திமுக மற்றும் அமைச்சர் உதயநிதியை இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்தார். இதனை தொடர்ந்து இரவில் அமைச்சர் உதயநிதியை விமர்சனம் செய்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதையடுத்து நிவாரண நிதி கேட்டு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும் நேரிலும் அவர் பிரதமர் மோடியை சந்தித்து நிவாரண நிதி வழங்க கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசு சார்பில் மொத்தம் 21 ஆயிரம் கோடி வரை நிவாரண நிதி கோரப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தரப்பில் தற்போது வரை ரூ.450 கோடி மட்டும் தரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக மற்றும் திமுகவினர் இடையே கருத்து மோதல் உள்ளது.
இந்நிலையில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‛‛அப்பன் வீட்டு காசை கேட்கவில்லை. தமிழக மக்களின் வரிப்பணத்தை தான் கேட்கிறோம்'' எனக்கூறி மத்திய அரசை விமர்சித்து இருந்தார். இதற்கு இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாக்கை அடக்கி பேச வேண்டும் என கூறினார்.
இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் திமுக மற்றும் அமைச்சர் உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய உண்மைகள் திமுக அமைச்சர்களை கடுமையாக பாதித்திருப்பதாக அறிகிறேன். தமிழக மக்கள் செலுத்திய வரியை தான் கேட்கிறோம் என்று வழக்கம் போல் திசை திருப்பும் வேலையில் இறங்கியுள்ள திமுக அமைச்சர்களுக்கு சில கேள்விகள்.
தமிழக மக்களின் வரி பணத்தில் இருந்து கோபாலபுரத்தின் இளவரசரும், மாப்பிள்ளையும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்தார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை, தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் சொன்னார். அந்த 30,000 கோடி எங்கே என்று தான் நாங்கள் கேட்கிறோம்.
DMKFiles வெளியிட்டபோது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் இயங்குவதை சுட்டி காட்டி துபாயிலிருந்து நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து வருவதாக சொன்ன 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். முறைகேடாக கொள்ளையடித்த மக்கள் வரிப்பணத்தை முதலீடாக கொண்டுவருகிறீர்களா என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால் பணிகளில் 98 சதவீதம் முடித்துவிட்டோம் என்று தமிழக முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள் அனைவரும் சொன்ன போது, நீங்கள் சொன்னது எல்லாம் பொய், 42 சதவீதம் பணிகள் தான் முடிந்துள்ளது என்று நாங்கள் சொல்லவில்லை, திமுக அமைச்சர் கே என் நேரு சொன்னார். 98 சதவீதம் நிறைவடைந்ததாக சொல்லப்பட்ட பணிகளுக்கு செலவிட்ட தொகை என்ன ஆனது என்று தான் நாங்கள் கேட்கிறோம்.
ஊழல் புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். நேற்று மற்றொரு திமுக அமைச்சர் பொன்முடி ஊழல் புகாருக்கு சிறை தண்டனை பெற்று சிறை செல்லவுள்ளார். இது மட்டுமில்லாமல், திமுக அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து சிறை தண்டனை பெறும் நீங்கள் மக்கள் வரி பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்று பாடம் எடுக்க வேண்டாம். புழல் சிறையில் திமுக அமைச்சர்களுக்கென ஒரு தனி கட்டிடம் உருவாக்குங்கள்.
மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய உண்மைகள் திமுக அமைச்சர்களை கடுமையாக பாதித்திருப்பதாக அறிகிறேன். தமிழக மக்கள் செலுத்திய வரியை தான் கேட்கிறோம் என்று வழக்கம் போல் திசை திருப்பும் வேலையில் இறங்கியுள்ள திமுக…
— K.Annamalai (@annamalai_k) December 22, 2023
ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்ததாக சொல்லப்படும் நீரோ மன்னன் போல தென் தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தவித்த போது தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் இந்தி கூட்டணி சந்திப்பில் பங்கேற்க டெல்லி சென்றிருந்தார். அங்கு திமுகவினருக்கு மொழிபெயர்க்க முடியாது என்றும் திமுகவினர் இந்தி கற்க வேண்டும் என்றும் உங்களை பீகார் மாநில முதல்வர் அவமானப்படுத்திய போது பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கற்று தந்ததை திடீரென்று மறந்துவிட்டீர்களா?
விளம்பரத்திற்காக ஆட்சி நடத்தி ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் பொழுதை போக்கும் நீங்கள் இனியும் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. மத்திய அரசு தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தது என்பதை வெள்ளை அறிக்கையாக கொடுத்துள்ளது தமிழக பாஜக. தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது. அதை ஊழல் செய்யாமல் மக்களிடம் சென்று உங்களால் சேர்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை அதை தடுக்காதீர்கள்'' என விமர்சித்துள்ளார்.
அதேபோல் தமிழக பாஜகவின் துணை தலைவரான நாராயன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛நிர்மலா சீதாராமனின் 'மரியாதைக்குரிய' அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை : உதயநிதி!... மரியாதையே தெரியாத உங்கள் அப்பாவின் வீட்டு பணத்தை கொடுக்கிறீர்களா? அல்லது உங்களின் தாத்தா வீட்டு பணத்தை கொடுக்கிறீர்களா?'' என தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications