பிளஸ் 2 ரிசல்ட் வந்த ஒரே மாதம்.. மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும்.. திண்டுக்கல் லியோனி!
பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஒரு மாதத்தில், தேர்வில் தோல்வியடைந்தவர்களோடு சேர்த்து தேர்வு எழுதாதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது முதல் நாள் நடைபெற்ற தமிழ்த் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆனது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நேற்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வையும் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுத்தேர்வு எழுதாத 5.6% மாணவர்கள்
இதற்கு பிளஸ் 1 பொதுத்தேர்வில் அடைந்த தோல்வி, பிளஸ் 2 பொதுத்தேர்வு பயம், கொரோனா பரவலின் போது ஆல் பாஸ் செய்யப்பட்டவர்கள் முதல்முறையாக பொதுத்தேர்வை எதிர்கொண்டது ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது. வழக்கமாக 4 சதவிகிதம் வரை மாணவர்கள் தேர்வு எழுதாத சூழலில், நடப்பாண்டில் 5.6 சதவிகிதம் மாணவர்கள் தேர்வை எழுதாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்பில் மகேஷ் ஆலோசனை
இதனிடையே பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்கள் தேர்வு ஏன் எழுதவில்லை என்பது குறித்து தேர்வு நாளன்றே விசாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல் மொழிப் பாடத்தை எழுதாத மாணவர்களை, அடுத்து வரும் தேர்வை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மறுவாய்ப்புக்கு முன் சிறப்பு வகுப்புகள்
அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்கள் 38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8,500 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேரும் முதல்நாள் தேர்வை எழுதவில்லை என்பது தெரிய வந்துள்ளது. யாரெல்லாம் தேர்வை எழுதவில்லையோ, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி மறு வாய்ப்பில் தேர்வு எழுத வைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் மாணவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டியுள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

ஒரே மாதத்தில் மறுதேர்வு
இந்த நிலையில் அதிகளவில் மாணவர்கள் தேர்வினை எழுதாதது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் லியோனி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான ஒரு மாதத்தில் மறுதேர்வு நடைபெறும். அதில் தேர்வில் தோல்வி அடைந்தவர்களோடு சேர்த்து தேர்வு எழுதாதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வை 80 சதவீத மாணவ, மாணவிகள் எழுதியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications