நிர்மலா சீதாராமனின் கரிசனம்.. புதுக்கோட்டை கோபால கிருஷ்ணன் கேட்டதுமே.. இதுதான் தாயுள்ளம்.. சபாஷ்
சென்னை: ‛‛அம்மா புதுக்கோட்டையை சேர்ந்த குடும்பத்துக்கு ஊசி வாங்க கொஞ்சம் உதவி செய்யலாமா?'' என எக்ஸ் வலைதள பக்கத்தில் கேட்டவருக்கு தாயுள்ளத்துடன் நிர்மலா சீதாராமன் தனது அலுவலகம் மூலமாக உதவி செய்தது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு சமூக வலைதளத்தில் உதவி வேண்டி பதிவு ஒன்றை பதிவிட்ட நபருக்கு பதிலளித்து உடனடியாக அவருக்கு உதவியுள்ள நிகழ்வானது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில் அவர் களமிறங்கவில்லை.
மேலும் தேர்தல் செலவுக்கு பணம் இல்லாததால் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மறுத்ததாக அவர் விளக்கமும் அளித்து இருந்தார். இந்நிலையில் தான் எக்ஸ் பக்கத்தில் உதவி கேட்ட தமிழகத்தை சேர்ந்தவருக்கு உடனடியாக நிர்மலா சீதாராமன் உதவி செய்துள்ளார்.
அதாவது கோபால கிருஷ்ணன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛அம்மா, புதுக்கோட்டையில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மக்கள் மருந்தகம் மூலம் tereparatide Injection தேவைப்படுகிறது. எங்களுக்கு உதவி செய்ய முடியுமா?'' என நிர்மலா சீதாராமனை ‛டேக்' செய்து பதிவிட்டார். இதையடுத்து உடனடியாக நிர்மலா சீதாராமனின் அலுவலகம் கையாளும் எக்ஸ் பக்கத்தில் இருந்து கோபாலகிருஷ்ணனுக்கு பதில் அனுப்பப்பட்டது
அதில், ‛‛நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த விஷயம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் தொடர்பு உடையது. இதனை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். தயவுசெய்து உங்களை தொடர்பு கொள்வதற்கான விவரங்களை DM மூலம் அனுப்புங்கள்'' என பதிவிடப்பட்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து கோபாலகிருஷ்ணன், ‛‛உங்களின் DM ஓபன் ஆகவில்லை'' என பதிவிட்டார். அதற்கு நிர்மலா சீதாராமனின் அலுவலகம் தரப்பில், ‛‛மீண்டும் ஒருமுறை செக் செய்து பாருங்கள்'' என கூறப்பட்டது. இதையடுத்து கோபாலகிருஷ்ணன் DM மூலம் தனது விபரங்களை அனுப்பி வைத்தார்.
இதையடுத்து அவருக்கு தேவையான மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையும் கோபாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது கிடைத்த மருந்து, ஊசிகளின் போட்டோவை பதிவிட்ட கோபாலகிருஷ்ணன், ‛‛நோயாளிக்கு தேவையான மருந்து கிடைத்துவிட்டது. சரியான நேரத்தில் உதவிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துக்கு நன்றி. ஒருங்கிணைப்பு செய்து ஒத்துழைப்பு தந்த நிர்மலா சீதாராமன் அலுவலகம் மற்றும் அம்மா நிர்மலா சீதாராமனுக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார். இந்த பதிவை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications