Donald Trump: ஸ்பெயின் வீரர்களை கொண்டாட விடாமல் குறுக்கே நின்ற டிரம்ப்.. பிடித்து தள்ளிவிட்ட பிஃபா தலைவர்
வாஷிங்டன்: உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் கோப்பையை தட்டி சென்றது. கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு பிபா தலைவரும் அமெரிக்க அதிபர் டிரம்பும் கூட்டாக உலக கோப்பையை அளித்தனர். கோப்பையை பெற்றதும் வெற்றிக்கு கொண்டாட்டத்திற்கு ஸ்பெயின் வீரர்கள் ரெடியான போது டிரம்ப் உடனே நகர்ந்து செல்லாமல் அவர்களுடன் நிற்க முற்பட்டார்.
இதை கவனித்த ஃபிபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உடனே அங்கு வந்து டிரம்ப்பை அங்கிருந்து அழைத்துச் சென்றார். இருந்தாலும் தயங்கி தயங்கியே டிரம்ப் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஒரு கோல் கூட போடாத அர்ஜெண்டினா
உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் கோப்பையை தட்டி சென்றது. அர்ஜெண்டினா அணியை ஒரு கோல் கூட போட விடாமல் கெத்தாக ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.
வெற்றிக்கோப்பையை தட்டிசென்ற ஸ்பெயின் வீரர்கள் கோப்பையை வாங்கிய பின் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து இந்த உலக கோப்பை போட்டி தொடரை நடத்தியதால், பரிசளிப்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்று வீரர்களுக்கு கோப்பையை வழங்கினார். வழக்கமாக வெற்றிக் கோப்பையை வழங்கிய பிறகு சிறப்பு விருந்தினர்கள் போடியத்தில் இருந்து உடனே விலகி செல்வது வழக்கம்.
நகராமல் நின்ற டொனால்டு டிரம்ப்
ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், கோப்பையை வழங்கிய பிறகும் உடனே நகராமல் வீரரக்ளுக்கு குறுக்கே கேமராவை மறைக்கும் விதமாக நின்று கொண்டிருந்தார். பின்னர் ஸ்பெயின் கேப்டன் ரோட்ரி அவரை மெதுவாக நகருமாறு சைகை செய்தார். ஆனாலும் டிரம்ப் உடனே அங்கிருந்து நகரவில்லை. இதனால் ஓரமாக நின்று கொண்டு இருந்த ஃபிபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உடனே அங்கு வந்து டிரம்ப்பை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
ஸ்பெயின் அணியினருடன் இணைந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் டிரம்ப் பங்கேற்க திட்டமிட்டு இருப்பது போல அவரது செயல்பாடுகள் இருந்தன. ஆனால், இதனை விரும்பாத ஸ்பெயின் கேப்டன், டிரம்பை நகர வைத்தது உலக கோப்பை பரிசளிப்பு விழா போடியத்தில் நெருடலான சூழலை ஏற்படுத்தியது.
வீடியோ வைரல்
அமெரிக்க அதிபர் டிரம்பை, ஸ்பெயின் கேப்டன் ஒருபக்கம், உலக கால்பந்து சம்மேளன தலைவர் (ஃபிபா) ஒருபக்கம் நகர வைத்தாலும் டிரம்ப் விடாப்பிடியாக இன்ச் இன்ச் ஆகவே நகர்ந்தார். ஸ்பெயின் வீரர்களுடன் ஓரு ஓரமாக நின்று போஸ் கொடுத்த பிறகே டிரம்ப் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நம்பகத்தன்மைக்கு பாதிப்பு
உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரில் டிரம்பின் செயல்பாடு ஏற்கனவே ஒருமுறை விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. அமெரிக்க அணி, போஸ்னியா & ஹெர்சகோவினா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இந்தப் போட்டியில், அமெரிக்க வீரர் போல்ரெயின் பலோகனுக்கு போட்டி நடுவர் ரெட் கார்டு காட்டினார். இந்த விவகாரத்தில் தலையிட்ட டிரம்ப், "அமெரிக்க வீரர் மீது தவறு இல்லை. இந்த முடிவை உடனே மறு பரிசீலனை செய்யுமாறு ஃபிபா தலைவருக்கு கோரிக்கை வைத்தேன்" என்றார்.
இதையடுத்து பிஃபா தனது ஒழுங்குமுறை விதிகளின்படி பலோகனின் தடையை நிறுத்தி வைத்து பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் விளையாட அனுமதி அளித்தது.. டிரம்பின் இந்த செயல் அடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பிஃபாவின் இந்த முடிவுக்கு ஐரோப்பிய கால்பந்து சங்கம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. உலக கோப்பை தொடரின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் விமர்சித்து இருந்தது.


Click it and Unblock the Notifications
