கரூரில் செஞ்சுரி போட்ட மழை.. ஆஹா இப்போ சென்னை பக்கம் திரும்புதே.. இரவு சம்பவம் இருக்கு- வெதர்மேன்
சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், எங்கே எந்தளவுக்கு மழை பெய்துள்ளது.. சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே கோடை வெயில் உச்சத்தில் இருந்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரும்பாலான இடங்களில் மக்கள் வெளியே கூட வர முடியாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருந்தது.

ஆனால், கடந்த சில வாரங்களாக வானிலை மொத்தமாக மாறியிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவதால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலை ஏற்பட்டுள்ளது.
நல்ல மழை: இன்று கூட வானிலை மையம் கணித்தது போலவே மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது. பல இடங்களில் மாலை தொடங்கி இரவு வரை மழை கொட்டி வருகிறது. இதற்கிடையே இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.
வெதர்மேன்: மாலையில் முதலில் திருச்சி மழை குறித்து அவர் தனது ட்விட்டரில், "திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, வால்பாறை, டெல்டா பகுதிகளிலும் மீண்டும் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளன" என்று பதிவிட்டிருந்தார். வெப்ப அலையால் தவித்த திருச்சிக்கு உரிய மழை பெய்து வருவதாகவும் அதிகபட்சமாகத் திருச்சி விமான நிலையத்தில் மாலை 5.30 மணி வரை 101 மி.மீ. மழை பெய்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது மற்றொரு ட்வீட்டில், "திருச்சியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. லிஸ்டில் இப்போது சேலமும் இணைகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதத்தில் திருச்சியில் பெய்யும் கனமழை இதுவாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் மழை: என்னப்பா இது மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் தான் மழை பெய்யுது.. சென்னைக்கு எல்லாம் மழை இல்லையா என நெட்டிசன்கள் புலம்பினர். இதற்கிடையே சென்னைவாசிகளுக்கும் குட் நியூஸ் தரும் வகையில், சென்னையிலும் நள்ளிரவு அல்லது அதிகாலையில் மழை பெய்யலாம் என அவர் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், " (திருச்சியை தொடர்ந்து) கரூரிலும் மழை சதம் அடித்துள்ளது. இதற்கிடையில், இரவு முதல் காலை வரை சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் கொஞ்சம் மழை பெய்யும். மழை மேகங்கள் ஈசிஆரில் இருந்து நகர்வது தெரிகிறது. கோடை வெப்பம் உச்சமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் எந்தளவுக்கு (மழை) கிடைத்தாலும் அதை அனுபவிக்கவும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் நாளையும் மழை தொடரும் என்றே கூறப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்,. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல்,திருப்பூர். கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications