விசிகவுக்கு டபுள் ஜாக்பாட்! தேர்தல் வெற்றி + மாநில கட்சி அந்தஸ்து.. குஷியில் சிறுத்தைகள்
சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்தை பெற இருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்தது.

இறுதியாக 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேசிய அளவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது.
ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை நிலை வேறு. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
திமுகவை பொறுத்தவரை தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி என 21 தொகுதியிலும், நாமக்கல்லில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாதேஷ்வரன் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டார். இந்த 22 தொகுதிகளையும் திமுக கைப்பற்றுகிறது.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள், ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் ஒதுக்கப்பட்டிருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்த அளவில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இப்படியாக இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி கண்டுள்ளன.
இந்நிலையில், விசிகவுக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைக்க இருக்கிறது. சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ள நிலையில், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை விசிக பெற உள்ளது. மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற, மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெல்ல வேண்டும். அல்லது, மாநிலத்தில் பதிவாகும் ஓட்டுகளில் 8% வாக்குகளை பெற வேண்டும். அந்த வகையில், 2 தொகுதிகளில் வென்றதால் விசிகவுக்கு அங்கீகாரம் கிடைக்க உள்ளது.
லோக்சபா தேர்தலில் வெற்றி, மாநில அந்தஸ்து என இரட்டை வெற்றியை விசிக பெற்றிருப்பதால் அக்கட்சியின் தலைவர்கள் தொடங்கி, தொண்டர்கள் வரை உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக பாமக மாநில கட்சி அந்தஸ்தை இழந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications