கேப்டனுக்கே கிடைக்காத வாய்ப்பு.. துணை முதல்வராகும் பிரேமலதா? ஒரே போடாகப் போட்ட தேமுதிக புள்ளி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தற்போதிலிருந்தே தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக தயாராகி வருகின்றன. கூட்டணி பலம் தான் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் என்ற நிலையில் ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகளை சமாளிக்கவும், புதிதாக கட்சிகளை அழைத்து வரவும் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதாவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவுக்கு மிகப் பெரிய பலப் பரீட்சை என்று தான் சொல்ல வேண்டும். 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவை சந்தித்ததால் பல பிரச்சினைகளுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் பிறகு பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றார்.

AIADMK Premalatha Vijayakanth edappadi palaniswami

அதற்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அதே நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் எதிர்நோக்கி உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் பாஜக வந்து போவதும், பாமக வந்து போவதுமாக இருக்கிறது. அதே நேரத்தில் தேமுதிக மட்டுமே தற்போது அதிமுக கூட்டணியில் 2026 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கின்றன. 2026 தேர்தல் வரை இந்த கூட்டணி தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கின்றன. நாம் தமிழர் தனித்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில் அரசியலின் புதிய வரவாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்கிறது. இப்படி பலமுனை போட்டி 2023 சட்டமன்றத் தேர்தலில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வென்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கும் நிலையில் தனது தலைமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பாஜகவை பொறுத்தவரை ஒன்று இரண்டு சீட்டுகள் கிடைத்தாலே பெருமை தான். ஆனால் திமுகவோ வரலாற்றிலேயே முதன்முறையாக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் கனவில் இருக்கிறது. இப்படி பல பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியை வலுவாக்க வேண்டிய கட்டாயமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது. பாமக உள்ளிட்ட கட்சிகளை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார். மேலும் தமிழக வெற்றி கழகத்தையும் அதிமுக கூட்டணியில் கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சில எம்பிக்களின் மக்களவை உறுப்பினர் பதவி காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. யாருக்கு அந்த பதவியை வழங்குவது என எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுக நெருக்கடி இருப்பதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு மக்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என கூறப்பட்டாலும், அப்படி ஒன்றும் ஒப்பந்தம் செய்யவில்லை என எடப்பாடி பழனிச்சாமி பேசியது பிரேமலதா விஜயகாந்த் தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவியை வழங்கி, அதிமுக கூட்டணிக்குள் இழுத்து வர எடப்பாடி திட்டமிட்டு இருப்பதாகவும் அதன் காரணமாகவே தேமுதிக ஓரம் கட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர் தேமுதிகவினர். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது அதற்கு பிறகு அவர் மக்களவைத் தேர்தலிலும் தேமுதிக அதிமுக கூட்டணி தொடரும் என்கின்றனர் சில தேமுதிக நிர்வாகிகள்.

இந்த நிலையில் அரியலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேமுதிக துணை பொது செயலாளர் பாலமுருகன், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் பிரேமலதா விஜயகாந்த்துக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். நமது கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா துணை முதல்வராக கூட வர வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பிரேமலதா விஜயகாந்த் இடையே என்ன ஒப்பந்தம் போட்டுள்ளார் என்று அவர்களுக்கு தெரியும். மாநிலங்களவை சீட்டு உறுதி என எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருக்கிறார். எங்கள் கூட்டணியை உடைக்க வேண்டும் என சிலர் முயற்சி செய்கிறார்கள். தேமுதிக கூட்டணி 2026ல தொடரும் வெற்றி பெறும்" என பேசி இருக்கிறார்.

அவரது இந்த பேச்சு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை துணை முதல்வர் பதவி என்பது இருந்ததில்லை. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை சமாளிக்க எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பதவியை வழங்கினார். அதற்கு முன்னர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதை பின்பற்றிய தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தமிழக வெற்றிக் கழக கூட்டணி அமைந்தால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு - பவன் கல்யான் போல, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும், விஜய் துணை முதலமைச்சர் ஆகவும் வர வாய்ப்பு இருப்பதாக சில தகவல்கள் உலாவின. இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், பிரேமலதா விஜயகாந்த் தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்க போகிறார் என்ற தகவல் அந்த கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தான் விஜயகாந்த்-க்கு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில நிகழ்வுகளால் அவர் அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதே நேரத்தில் கூட்டணி கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவியா என அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் 2026 சட்டமன்றத் தேர்தல் பல திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். தமிழகத்தில் இதுவரை நடக்காதவைகள் எல்லாம் நடக்கலாம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். சொன்னது போலவே 2026 சட்டமன்ற தேர்தலில் பல யூடர்ன்களும், திடீர் ட்விஸ்ட்களும் இருக்கும் தான் போலயே..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+