ஜூன் 5 ப்ளான்.. ஜூலை 5ல் கொலை! ஆன்லைனில் வந்த கோடாரி..ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் அதிமுக கவுன்சிலர் கைது!
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை வழக்கில் ஏற்கனவே கைதான அருள் என்பவரின் செல்போனை வைத்திருந்ததாக அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஜூன் 5-ம் தேதி திட்டமிடப்பட்ட நிலையில் ஜூலை 5ஆம் தேதி கொலை அரங்கேறி இருப்பதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு, பின்னர் பெரம்பூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது.
கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டது. மேலும், கொலைக்கு எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆர்காடு சுரேஷின் தம்பி பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் . அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதிமுக நிர்வாகியான மலர்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து மலர் கொடியை அதிமுகவிலிருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதேபோல கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரனும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஜிகே வாசன் அறிவித்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலை வழக்கில் ஏற்கனவே கைதான அருளின் செல்போனை வைத்திருந்த கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் கைதான திருவேங்கடம் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது 15 பேர் சிறையில் இருக்கின்றனர்.
இதற்கிடையே ஜூன் 5ஆம் தேதி கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டதாகவும், ஜூலை ஐந்தில் கொலை திட்டம் அரங்கேறியாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பல நாட்கள் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு திட்டமிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை விட்டு வைத்தால் அனைவரின் உயிருக்கும் ஆபத்து என இவ்வழக்கில் கைதான அருள் மூளைச்சலவை செய்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து ஆற்காடு சுரேஷின் தங்க நகைகளை விற்பனை செய்த பொன்னை பாலு சுமார் மூன்றரை லட்சத்தை அருளிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை ஆம்ஸ்டாங்கை கொலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படைக்கு கொடுத்துள்ளார் அருள். மேலும் ரௌடி சம்போ செந்தில் கூட்டாளியும் வழக்கறிஞருமான ஹரிஹரன் ஜூன் 14ஆம் தேதி அருளுடன் இருந்து பணத்தைப் பெற்று இருக்கிறார். மேலும் கொலையை எப்படி செய்வது? ஆம்ஸ்ட்ராங் எங்கிருப்பார்? உள்ளிட்ட விவரங்களை டெலிகிராம் செயலி மூலம் ஹரிஹரனுக்கு சம்போ செந்தில் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக ஆன்லைனில் கோடரியை வாங்கி இருக்கிறார் அருள். அந்த கோடாரியை பயன்படுத்தி தான் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டதாக ஹரிஹரன் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஜூன் 5ஆம் தேதி கொலைத்திட்டம் அரங்கேற்றப்பட்ட நிலையில் ஜூலை 5ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல கட்சிகளையும் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்தடுத்து மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications