மதுரையில் எழுச்சி மாநாடு.. மா.செக்கள் கூட்டத்தில் ‘லோகோ’ வெளியிட்டு மாஸ் காட்டிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை: மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கான இலச்சினையை, இன்று நடைபெற்று வரும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஓ. பன்னீர்செல்வம் அடுத்த மாநாட்டை கொங்கு மண்டலத்தில் நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில், அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, மதுரையில் நடத்தப்போகும் மாநாடு, அதிமுக - பாஜக கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு அதிமுக உறுப்பினர் சேர்க்கை பணிகளின் விவரம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவது தொடர்பாக ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி சென்னை அசோகா ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், "தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேச வேண்டும். எங்களுடன் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுகுறித்த அறிவிப்பு தேர்தல் சமயத்தில் வெளியிடப்படும். கொங்கு மண்டலம் என்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் எஃகு கோட்டை. அங்குள்ள தொண்டர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அதிமுக தலைமைக் கழகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டார். அந்த லச்சினையில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களோடு, ஜல்லிக்கட்டு காளை, வைகை ஆற்றின் படமும் இடம்பெற்றுள்ளது.
வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற பெயரில் மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்த அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது பற்றி கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications