திமுக உடன் ரகசிய உறவு! ஓபிஎஸ் பிளானே இதுதான்.. எல்லாம் எனக்கு தெரியும்! தங்கமணி சொல்லும் சீக்ரெட்
சென்னை: அதிமுகவில் இப்போது உட்கட்சி குழப்பம் ஏற்பட்டு உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணியை ஓபிஎஸ் அணியைக் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.
அதிமுகவில் இப்போது உட்கட்சி குழப்பம் தொடர்ந்து வருகிறது. அங்கு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இரு அணிகளாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இரு தரப்பும் எதிர்த் தரப்பு ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகின்றனர். நிர்வாகிகள் யாரும் ஓபிஎஸ் பக்கம் சென்றுவிடாமல் இருக்கவும் எடப்பாடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதிமுக பொன்விழா
மேலும், எடப்பாடி அணியினர், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களைத் தொடர்ந்து மிகக் கடுமையாகவே விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஓபிஎஸ் திமுக உடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர்கள் சாடி வருகின்றனர். இதற்கிடையே எடப்பாடி இப்போது இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் நிலையில், அதிமுக பொன்விழா நிறைவு விழாவை மிகச் சிறப்பாக நடத்தி முடிக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

தங்கமணி
அதன்படி நாமக்கல்லில் நகர அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அங்குப் பேசிய அவர், "அதிமுகவில் இப்போது பெரிய அளவில் குழப்பம் எல்லாம் எதுவும் இல்லை. இப்போது சிறு தொய்வு மட்டுமே ஏற்பட்டு உள்ளது.

திமுக பி டீம்
சிலர் திமுக உடன் கைகோர்த்துக் கொண்டு அதிமுகவை அழிக்க முயல்கிறார்கள். அப்படிச் செய்தார்கள். இதற்கு என்ன காரணம்னு எங்களுக்கு தெரியும். நம் மீது வழக்கு வராது என்பது அவர்களின் எண்ணம். இதன் காரணமாகவே ஒரு அணி தொடர்ந்து திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறது. திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தார். அந்த எதிர்ப்பில் எப்போதும் பின்வாங்கக் கூடாது.

ஒரே தலைவர் எடப்பாடி
எம்ஜிஆர் கூறியதை போல அதே எதிர்ப்புடன் எடப்பாடி பழனிசாமி இப்போதும் செயல்பட்டு வருகிறார். திமுகவை எதிர்க்கும் ஒரே தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். எனவே, அவரை நாம் பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிற்குச் சிறப்பான ஆட்சியை அவர் கொடுத்தார். இதை எல்லாம் தமிழக மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள்.

திமுக எம்பி மீது தாக்கு
திமுக மசெ ராஜேஷ்குமார் எம்பி இந்தி திணிப்பைப் பற்றிப் பேசவே மறுக்கிறர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் நாமக்கல் நகர்மன்ற தலைவராக உள்ள நிலையில், அவரும் சரி எம்எல்ஏவும் சரி எதிலும் தலையிடக் கூடாது என்று மறைமுக உத்தரவு போட்டு இருக்கிறார் ராஜேஷ்குமார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நான் என்ன செய்தேன் என்றும் அவர் கேட்டு இருக்கிறார்.

விவாதத்திற்குத் தயார்
அவரது சவாலை நான் ஏற்கிறேன். பொது மேடைக்கு வரச் சொல்லுங்கள்.. 10 ஆண்டுகள் நான் என்ன செய்தேன் என்பதை விளக்குகிறேன். நானும் முன்னாள் அமைச்சர் சரோஜாவும் இங்கு எத்தனை ஆய்வுகளை நடத்தி இருக்கிறோம் என்பது மக்களுக்குத் தெரியும். இதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. இதையெல்லாம் மறைத்து மக்களை ஏமாற்றவே அவர் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்.

அத்தனையும் பொய்கள்
இதுபோன்ற பொய்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவருக்குத் துணிவு இருந்தால், பொது மேடைக்கு வரட்டும். கடந்த 1.5 ஆண்டுகளில் அவர் என்ன செய்தார் என்பதைக் கூறட்டும். நானும் கடந்த 10 ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்தேன் என்பதைப் பட்டியலிட்டு கூறுவேன். இந்த விவகாரத்தில் மக்கள் முடிவு செய்யட்டும்" என்றும் அவர் சவால் விடுத்தார்.












Click it and Unblock the Notifications