அதிமுக அலுவலக சூறை வழக்கு.. ஓபிஎஸ் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா? சிபிசிஐடி இன்று அறிக்கை தாக்கல்
சென்னை: அதிமுக அலுவலக சூறை வழக்கில் ஓபிஎஸ் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானதா என்பது குறித்து நீதிமன்றத்தில் சிபிசிஐடி இன்று விசாரணை அறிக்கையை தாக்கல் செய்கிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக் கூட்டத்தை நடத்தி கொண்டிருந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
அப்போது கதவு பூட்டப்பட்டிருந்ததை அடுத்து பூட்டை ஆதரவாளர்கள் உடைத்தனர். ஜெயலலிதா அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள், அலுவலகத்தின் ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் வேனில் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

45 பேர் காயம்
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 3 முன்னாள் எம்எல்ஏக்கள், 2 காவலர்கள் உள்பட 45 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்படி கடந்த 7 ஆம் தேதி விசாரணை அதிகாரி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான குழு அதிமுக அலுவலகத்தில் விசாரணை நடத்தியது.

5 மணி நேரம் விசாரணை
வீடியோ பதிவுகளுடன் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து சிபிசிஐடி அளித்த சம்மன் படி கடந்த 14 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகினார். அப்போது ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பொருட்கள், அலுவலக சொத்து பத்திரங்கள் குறித்தும் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

சிவி சண்முகத்திடம் விசாரணை
இந்த நிலையில் மகாலிங்கம் அளித்த விளக்கத்தை தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி 3 பேர் கொண்ட போலீஸார் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து மீண்டும் விசாரணை நடத்தினர். பின்னர் அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்திய வழக்கில் புகார் அளித்த முன்னாள் அமைச்சரும் இன்னாள் ராஜ்யசபை உறுப்பினருமான சி வி சண்முகத்திடம் சிபிசிஐடி சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தினர்.

இன்று விசாரணை அறிக்கை தாக்கல்
அது போல் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் நேற்றுமுன் தினம் விசாரணை நடத்தப்பட்டது. சிவி சண்முகம், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியின் விளக்கத்தை சிபிசிஐடி வாக்குமூலமாக பதிவு செய்தனர். இந்த நிலையில் அதிமுக அலுவலகம் மோதல் வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்தநிலையில் இதுவரை இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையை அறிக்கையாக சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் இன்று தாக்கல் செய்கிறார்.












Click it and Unblock the Notifications