சீட்டுக் கட்டாய் சரியும் அதிமுக..எடப்பாடி மீட்டிங்கில் மும்மூர்த்திகள் ஆப்செண்ட்! ஸ்லீப்பர் செல்ஸ்?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று செங்கோட்டையன் விவகாரம் தொடர்பாக திண்டுக்கல்லில் அவசர ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி இருந்தார். பிற மாவட்டங்களில் இருந்து வேலுமணி, கேபி முனுசாமி, ஓஎஸ் மணியன், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், அருகில் இருந்தும் செல்லூர் ராஜு கலந்துகொள்ளவில்லை. கூட்டம் முடிந்த பிறகுதான் அவர் அங்கு வந்தார்.
மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களாகச் சொல்லப்படும் தங்கமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையன் பேசியதற்குப் பிறகு பல அதிமுக சீனியர்கள் அமைதி காப்பதும் தொண்டர்களைக் குழப்பம் அடையச் செய்துள்ளது.
அமைதியாக இருந்த அதிமுகவில் புயல் வீசத் தொடங்கி இருக்கிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற குரல் பல ஆண்டுகளாகவே ஒலித்து வரும் நிலையில் தற்போது அது தீவிரமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது.

சசிகலா ஆதரவு
2021 தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் நிலையில் சில சீனியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக தங்கமணி, செல்லூர் ராஜு, செங்கோட்டையன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக ஒன்று சேர வேண்டும் எனக் கடிதம் எழுதினார் முன்னாள் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட சசிகலா.
செங்கோட்டையன்
அதற்குப் பிறகு அதிமுகவில் கலகம் வெடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுக ஒன்று சேர வேண்டும் எனப் பேச, முதன்முறையாக மனம் திறந்து பேசினார் செங்கோட்டையன். அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும் எனவும் அதற்காகப் பத்து நாள் கெடு விதிப்பதாகக் கூறினார். இதை அடுத்து திண்டுக்கல்லில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு இருந்த எடப்பாடி பழனிசாமி நட்சத்திர விடுதி ஒன்றில் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்.
எடப்பாடி ஆலோசனை கூட்டம்
இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், சி. விஜயபாஸ்கர், கே.பி. முனுசாமி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வேலுமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கவனிக்கத்தக்க வகையில் மிக அருகில் இருந்த மாவட்டமான மதுரையிலிருந்து செல்லூர் ராஜு மிக தாமதமாகவே கூட்டத்துக்கு வந்தார். ஆனால் அதற்குள் எடப்பாடி பழனிசாமி கிளம்பிவிட்டார். செங்கோட்டையன் விவகாரம் வெளியான உடனேயே இரவிலிருந்து திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர்கள் குவிந்தனர்.
செல்லூர் ராஜு
ஆனால் செல்லூர் ராஜு மிக தாமதமாக வந்தது கவனிக்கத்தக்கது. மேலும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படும் தங்கமணியும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகத் தீவிரமாக ஆதரவு தெரிவித்து வந்த முன்னாள் அமைச்சரும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கமணி, சி.வி. சண்முகம்
தங்கமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை கூட்டத்தை அவர்கள் புறக்கணித்திருப்பது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பல நிர்வாகிகள் சசிகலாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என யூகங்கள் உலாவி வரும் நிலையில் அதன் காரணமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications