வார்த்தை தடிக்குது.. பாஜகவுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.. அண்ணாமலையை வறுத்தெடுத்த ஜெயக்குமார்!
சென்னை: பாஜகவுக்கு கொள்கையும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, மதவாத அரசியல் செய்யும் கட்சி பாஜக என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் களம் அனல் போல தகித்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரக் களத்தில் சூடான வாதங்கள் நடந்து வருகின்றன. நான்கு முனை போட்டி நிலவி வரும் நிலையில், அதிமுக - பாஜக இடையே வார்த்தை மோதல்கள் தீவிரமாக வெடித்துள்ளன.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார்கள். விமானத்தில் இருந்து வந்து இறங்கி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? உங்கள் ஏமாற்று வேலை தமிழ்நாட்டில் எடுபடாது. எத்தனை தலைவர்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.” எனப் பேசி இருந்தார். அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் கொடுக்க, அதற்கு அதிமுக தலைவர்கள் எதிர்வினை ஆற்ற என அரசியல் களம் பரபரத்தது.
இந்நிலையில் சேலத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவை ஒழிப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். உங்க பாட்டனையே பார்த்த கட்சி. உங்களை போல எத்தனையோ பேர் இப்படி கொக்கரித்தார்கள். ஆணவ திமிரில் இப்படி பேசாதப்பா.அண்ணாமலை ஒரு கவுன்சிலரா கூட ஆக முடியல. நீங்கள் வந்து அதிமுகவை ஒழிப்பீர்களா?" என காட்டமாக பேசினார்.
தம்பி அண்ணாமலை..பார்த்து நடந்துக்க! எகிறி அடித்த எடப்பாடி..! ’பாய்ண்ட்’ வந்ததும் குஷியான ர.ர.க்கள்..!
இந்நிலையில் இன்று தேனியில் பேசிய அண்ணாமலை, “அதிமுக தொண்டர்கள் வாக்கும் டிடிவி.தினகரனுக்கு தான். அதிமுக தொண்டர்கள் அமமுகவுடன் இணைய போகிறார்கள். தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இருக்காது. அவர்களை வழிநடத்தக் கூடிய உண்மையான தலைவன் யார் என்பது அதிமுக தொண்டர்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும்.” என்று பேசினார். அண்ணாமலையின் பேச்சால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொந்தளித்துள்ளார்.
அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி.. என்னையே தோற்கடித்த பாஜக காணாமல் போகும்.. ஜெயக்குமார் ஆவேசம்!
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “திடீர் சாம்பார் திடீர் ரசம் போல வந்த அரசியல்வாதி அண்ணாமலை. அவருக்கு வரலாறு தெரியாது. 50 ஆண்டுகளை கடந்துள்ள அதிமுக இன்னும் ஆயிரம் ஆண்டு காலம் இருக்கும். 31 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக.
பாஜகவுக்கு என்ன கொள்கை இருக்கிறது? மக்களை பிளவுபடுத்தி ஆதாயம் பார்க்கும் மதவாத கட்சி பாஜக. அக்கட்சிக்கு ஒரு கொள்கையும் கிடையாது, மண்ணாங்கட்டியும் கிடையாது. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் ஒரு வளர்ச்சியும் இருக்காது. அண்ணாமலை தான் கத்திரிக்காய்க்கு கை கால் முளைத்தது போல அவ்வப்போது வந்து பேசிக் கொண்டிருக்கிறார்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications