அதிமுக வேலுமணி கைவசம் வருமா.. சபாநாயகர் எடுக்க போகும் முடிவு என்ன.. சட்ட நிபுணர்கள் விளக்கம்
சென்னை: அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியும் என பிரிந்து இருக்கிறது. அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் பதவி என்று எடப்பாடி பழனிசாமியும், ஆனால் நான் தான் தலைவர், எனக்கு அதிக பெரும்பான்மை இருக்கிறது என்று கூறி வேலுமணியும், தனித்தனியாக தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதில் யாரை சபாநாயகர் ஆதரிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி சட்ட நிபுணர்கள் அளித்த விளக்கம் பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையில் தனியாக களம் இறங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்தது. மே 10ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்று விட்டார். ஆனால் எப்படியும் ஜெயிப்போம் என்று களம் இறங்கிய அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. திமுகவைவிட குறைந்த இடங்களிலேயே வென்றால், 3-வது இடத்தை பிடித்த அதிமுக, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் சட்டசபையில் இழந்தது.

இந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் வலியுறுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி சட்டசபை தலைவராகவும் எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக கடந்த 3 நாட்களாக சென்னையில் இருதரப்பும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர்.அதாவது எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அத்துடன் நான்தான் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் என்றும் உறுதியாக உள்ளார்.. அவருக்கு சில மாவட்ட செயலாளர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். அதோடு அவர்கள் தங்களுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது, எனவே அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக எஸ்.பி.வேலுமணிதான் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அவர்கள் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றனர். அதோடு அவர்கள் விஜய்யின் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தின்போது த.வெ.க.வுக்கு முழு அளவில் ஆதரவு கொடுத்து அமைச்சரவையில் இடம் பெறவும் முடிவு செய்துள்ளனர். இன்று முதல்வர் விஜய்யை சிவி சண்முகம் நேரில் சென்று சந்திக்க உள்ளார். தவெகவிற்கு வேலுமணி சிவி சண்முகம் அணி முழுமையாக ஆதரவு அளிப்பதாக கூறிவிட்டது.
இதனிடையே நேற்று பேரவை கூட்டம் முடிந்தவுடன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அந்த மனுவில் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராகவும், ஓ.எஸ்.மணியனை துணைத்தலைவராகவும் நியமித்து அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்டு கடிதம் வழங்கியிருந்தார்கள். அந்த கடிதம் கட்சி தலைவரின் கடிதமாக மட்டுமே இருந்தது. எனவே அதில் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து இல்லை.
இதற்கிடையே மாலை 6.10 மணிக்கு சி.வி.சண்முகம், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், காமராஜ், இசக்கி சுப்பையா உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் 'அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமித்து எம்.எல்.ஏ.க்கள் மட்டும் கையெழுத்து போட்டு கடிதம் கொடுத்திருந்தனர். அந்த கடிதத்தில் 9-ந் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் எஸ்.பி.வேலுமணியை தலைவராக தேர்வு செய்யப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக 9-ந் தேதி நடந்த கூட்டத்தில் கட்சியின் கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும்' கூறப்பட்டுள்ளது. எனவே அதனை சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் சபாநாயகர் எந்த முடிவு எடுப்பார்? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்து சட்ட நிபுணர்கள் கூறுகையில், தமிழக சட்டமன்றத்தில் ஒரு கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதில் கட்சித்தலைமை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆகிய இரண்டுமே மிக முக்கியமானவை. பொதுவாக, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அந்தந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூடி ஒருவரை தலைவராக தேர்ந்தெடுப்பார்கள். இவரே சட்டமன்றத்தில் அந்தக் கட்சியின் குரலாக இருப்பார்.
இந்த பதவிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் அல்லது உயர்மட்டக்குழு ஒருவரை பரிந்துரைக்கலாம். இறுதியாக அந்த பரிந்துரையை எம்.எல்.ஏ.க்கள் ஏற்று, முறைப்படி தீர்மானம் நிறைவேற்றி சபாநாயகருக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் (தலைமை) ஒரு கடிதத்தையும், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் மற்றொரு கடிதத்தையும் அளித்தால், அது ஒரு தலைமை போராட்டமாக மாறும். எனவே இதில் இறுதி முடிவை சட்டமன்ற சபாநாயகர் எடுப்பார். அதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சபாநாயகர் முதலில் அந்தக்கட்சியின் சட்டவிதிமுறைகளை ஆய்வு செய்வார். அந்த கட்சித்தலைமைக்கு, சட்டமன்ற கட்சி தலைவரை நியமிக்கும் அதிகாரம் உள்ளதா? என்று தீவிரமாக ஆய்வு செய்வார்.
முன்பு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் படி பார்த்தால், அரசியல் விவகாரத்தில் யார் தலைவர் என்பதை தீர்மானிப்பதில் "அசல் அரசியல் கட்சி" எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறியுள்ளன. அதாவது, வெறும் எம்.எல்.ஏ.க்கள் மட்டும் சேர்ந்து ஒருவரை நியமிக்க முடியாது. அதற்கு கட்சித்தலைமை அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது தான் விதியாக உள்ளது.
எப்போது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை முக்கியத்துவம் பெறும் என்றால், அவர்கள் இரண்டில் மூன்று பங்குக்கும் அதிகமான உறுப்பினர்களுடன், அதாவது அ.தி.மு.க.வில் உள்ள 47-ல் 32 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்று, "நாங்கள்தான் அசல் கட்சி" என்று உரிமை கோரும்போது அல்லது வேறொரு கட்சியுடன் இணையும்போது மட்டுமே எந்த பிரச்சனையும் இல்லை.
தற்போதைய சூழலில் கட்சியின் பொதுச்செயலாளருக்குத்தான் "விப்" எனப்படும் கொறடாவை நியமிக்கும் அதிகாரமும், கட்சியின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் அதிகாரமும் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் கட்சித்தலைமைக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக ஒருவரை நியமித்தால், அது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாக வாய்ப்பு அதிகமாக உள்ளது..
ஒரு கட்சித்தலைமைதான் சட்டமன்ற தலைவரை பரிந்துரைக்கும்; ஆனால் அந்த தலைவர் சட்டமன்றத்தில் செயல்பட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அவசியம். ஒருவேளை மோதல் ஏற்பட்டால், கட்சியின் அதிகாரப்பூர்வ "பொதுச் செயலாளர்" யாரோ, அவர் கொடுக்கும் கடிதமே சட்டப்படி வலுவானதாகக் கருதப்படும்" இதில் 32 பேர் ஒருவேளை வேலுமணியை ஆதரித்தால், முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாக வரும். ஒருவேளை32 பேருக்கு குறைவு என்றால் வேலுமணி அணிக்கு பாதகமாக வரும்.. சபாநாயகர் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.














Click it and Unblock the Notifications