எஸ்பி வேலுமணியிடம் 7 மணி நேரம் விசாரணை.. சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைய முயலும் மகளிரணியினர்!
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எம்எல்ஏ விடுதியின் மதில் சுவற்றின் மீது அதிமுக மகளிரணியினர் ஏறிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
அதிமுக ஆட்சியின் போது ஒப்பந்தங்கள் மூலம் ரூ 811 கோடி முறைகேடு செய்ததாக கோவை, சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் ரெய்டு நடைபெற்று வருகிறது.
முதலில் தமிழகத்தில் 53 இடங்களில் ரெய்டு நடந்து வருவதாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் எஸ் பி வேலுமணி உள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்க்
சோதனை செய்யப்பட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் எஸ் பி வேலுமணியிடம் எம்எல்ஏ விடுதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த எம்எல்ஏ விடுதி முன்பு முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இன்னாள் எம்எல்ஏக்கள், கட்சியினர் திரண்டனர்.

சுவர் ஏறி குதித்த நபர்கள்
அவர்கள் தங்களை உள்ளே விடுமாறு போலீஸாரிடம் தகராறு செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் ரமணா, பெஞ்சமின் போன்றோர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். உள்ளே விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தொண்டர்கள் சிலர் கேட்டை உடைக்க முயன்றனர். மகளிரணியினரோ ஆர்வ மிகுதியால் சுவரை தாண்டி குதித்தனர். அவர்களை போலீஸார் விரட்டினர்.

தோசை, உப்புமா
காலை முதல் மதியம் வரை தொண்டர்கள் அங்கேயே திரண்டிருந்ததால் அவர்களுக்கு தோசை, உப்புமா, பொங்கல் உள்ளிட்டவை காலை சிற்றுண்டியாக வழங்கப்பட்டது. இதையடுத்து மதியம் அதிமுகவினருக்கு தக்காளி சாதமும் வெஜ் பிரியாணியும் வழங்கப்படுகிறது. எஸ் பி வேலுமணியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வருவதால் விசாரணை இன்னும் தொடர்கிறது.

கோஷம், பரபரப்பு
எனினும் எம்எல்ஏ விடுதியின் உள்ளே தங்களை விட வேண்டும் என தொண்டர்கள் அங்கு கூடி கோஷமிட்டு வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது. எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்றது எப்படி என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

திமுக அரசு
இதனிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அது போல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கோர்ட் இருக்கும் போது எதற்காக இந்த ரெய்டு எல்லாம் , வேண்டுமென்றே திமுக அரசு பழி வாங்குகிறது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications