அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஸ்டாலினுக்கு PAவாக போனால் மருத்துவத்துறை தப்பிக்கும்.. ஜெயக்குமார் தாக்கு
சென்னை: கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு கூட இந்த மாநிலத்தில் பாதுகாப்பில்லை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஸ்டாலினின் பி.ஏ-வாக சென்றுவிட்டால் தமிழ்நாடு மருத்துவ துறை தப்பிக்கும் என்று விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு அரசு மருத்துவமைனையில், புற்றுநோய் உள்ளிட்டவற்றிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 6 மாத காலமாக பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் எனும் இளைஞர் தனது தாயை அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இவரது தாய் கடந்த சில நாட்களாக புற்றுநோய் உடன் தீவிரமாக போராடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது தாயை விக்னேஷ் தனியார் மருத்துவமனைக்கு மாற்றியிருக்கிறார். இப்படி இருக்கையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் சரமாரியாக தாக்கியுள்ளார்.

கழுத்து, தோள்பட்டை, தலை, காது மடல் என பல இடங்களில் மருத்துவருக்கு கத்தி குத்து காயம் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவரை மீட்ட பொதுமக்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் விக்னேஷை மருத்துவமனை பாதுகாவலர்கள் சுற்றி வளைத்து பிடித்திருக்கின்றனர். பின்னர் அவர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில்,
"எங்களிடமிருந்து சற்று தள்ளி விக்னேஷ் தாய் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீடீரென விக்னேஷ் என்ன நினைத்தார் என தெரியவில்லை. டாக்டரை கத்தியால் குத்தியிருக்கிறார். இதற்கான காரணத்தை போலீஸ் விசாரிக்க வேண்டும். ஏனெனில் மருத்துவர்கள் நோயாளிகளையும், உடன் வருபவர்களையும் சக மனிதர்களாக நடத்துவதில்லை. மருத்துவர்கள் பேசுவது கோபத்தை உண்டாக்கியுள்ளது. எனவே, இப்படி ஏதாவது நடந்ததா என்பதையும் விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, "கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்" என முதல்வர் x பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், "ஆயுதத்துடன் ஒருவர் மருத்துவமனைக்குள் வருகிறார். அவரை ஏன் முறையாக சோதிக்கவில்லை. இந்திய மருத்துவ கவுன்சில் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. அதில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து விதித்துள்ள விதிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இந்த ஆட்சியில் மருத்துவர்கள் முதல் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மக்கள் நிம்மதியாக வெளியில் சென்று வர முடியவில்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை.
கருணாநிதியின் பெயரை வைத்தால் மட்டும் போதுமா? விதிகள் படி, சட்டத்தின் படி பாதுகாப்பு வழங்க வேண்டாமா? ஸ்டாலின் அரசு அத்தகைய பாதுகாப்பு எதையும் வழங்கவில்லை. எனவே, எதிர்காலத்தில் மருத்துவர்கள் மீது எந்தவொரு தாக்குதல்களும் நடக்காத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஸ்டாலினின் P.A வாக சென்றுவிட்டால் தமிழ்நாடு மருத்துவ துறை தப்பிக்கும்" என்று விமர்சித்தார்.
முன்னதாக சம்பவம் நடந்த கிண்டி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டதால், போராட்டடம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications