மெரினாவில் 4 மணி நேரம் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்! 100ஐ அழைத்தாலும் வராத போலீஸ்! ஸ்தம்பித்த சென்னை
சென்னை: சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ஒட்டுமொத்த மக்களும் ஒன்றாக வெளியேறுவதால் மெரினா இருக்கும் சாலை முழுக்க போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறி வருகிறது. ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் 4 மணி நேரமாக அந்த கூட்டத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவிக்கும் காட்சிகள் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய விமான படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை 11 மணி வரை முதல் 1 மணி வரை நடைபெற்றது.

விமான சாகச நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதையொட்டி பொதுப் பணித் துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 15-க்கும் மேற்பட்ட சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்காக எந்தவித கட்டணத்தையும் பொதுமக்களிடம் பெறவில்லை. இதை காண எந்த டிக்கெட்டும் கிடையாது. வாகனங்களை நிறுத்த மட்டுமே பாஸ் தேவை. மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றன.
விமான சாகச நிகழ்ச்சியில் ஸ்டண்ட் ஷோக்களையும் இந்திய விமானப்படை செய்கிறது. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர்கள், சுகோய் 30 எம்கேஐ, மிராஜ் 2000, மிக் 29, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றன.
முதலில் பாராசூட் சாகச நிகழ்ச்சிகளுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் நடத்திய பாதுகாப்பு ஒத்திகைகளும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுக்கு வருவோர் குடை, தண்ணீர் பாட்டில், தேவையான உணவு ஆகியவற்றை கொண்டு வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்த சாகச நிகழ்ச்சியின் போது சுகோய் விமானங்கள், சூர்யகிரண் உள்ளிட்ட விமானங்கள் வானில் தீபாவளி பட்டாசு போல் நெருப்பை கக்கிக் கொண்டு சென்றன. இந்த நிகழ்வுகள் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு 10 லட்சம் பேர் பார்க்க வந்ததாக கூறப்படுகிறது.
மெரினாவில் மட்டும் 4 லட்சம் பேர் கண்டு களித்தார்களாம். இந்த கூட்ட நெரிசலால் பலர் மயங்கி விழுந்தனர். அவர்களை போலீஸார் ஸ்ட்ரெச்சரில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் நிகழ்ச்சி முடிந்த நிலையில் மக்களால் வெளியேற முடியாமல் மெரினா சாலையிலேயே தத்தளித்து வருகிறார்கள்.
மக்கள் உணவில்லாமல், குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறார்கள். திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் குடிநீர் கேட்டு வரும் நிலை உள்ளது. இந்த நிலையில் மெரினா சாலையில் அந்த மக்கள் கூட்டத்தில் ஒரு ஆம்புலன்ஸ் சிக்கி 4 மணிநேரமாக அவதிப்பட்டுள்ளது. பலர் இந்த கூட்ட நெரிசலில் கூட சிக்கி மயக்கம் அடைந்துள்ளனர். 100க்கு போன் செய்து 1 மணி நேரத்திற்கு மேலாகியும் காவல் துறையினர் வரவில்லை என சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications