"மேகதாது அணையால் தமிழகத்திற்கே லாபம்.." உதயநிதியை நேரில் சந்தித்த பின் டி.கே.சிவக்குமார் பரபர
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதற்கிடையே இன்று அரசு முறை பயணமாகச் சென்னை வந்துள்ள நிலையில், அவர் திடீரென அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே. சிவக்குமார் சில முக்கிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் அரசு இப்போது சென்னைக்கு வந்துள்ளார். பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்னை வந்துள்ள அவர், பிராண்ட் பெங்களூர் திட்டத்திற்காகவே சென்னை வந்துள்ளார்.

அதாவது பெங்களூரில் திடக்கழிவு மேலாண்மையில் நவீன செயல்முறைகளைப் புகுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காகவே டி.கே.சிவக்குமார் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு நேரில் பார்வையிட்டார்.
டி.கே. சிவக்குமார்: முதலில் இன்று காலை டி.கே. சிவக்குமார் சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை நேரில் பார்வையிட்டார். அந்த இயற்கை எரிவாயு மையம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்தார்.
அதன் பிறகு சென்னை ஸ்ரீனிவாஸ் குப்பை மேலாண்மை மையத்திற்கு டி.கே சிவக்குமார் தனது அதிகாரிகளுடன் நேரில் சென்றார். அங்குக் குப்பைகள் மறுசுழற்சி, பயோகேஸை பயன்பாடு, நிலையான வளர்ச்சி குறித்து எல்லாம் அவர் தெரிந்து கொண்டார். தொடர்ந்து பயோ எனர்கான் என்ற பயோகேஸ் தயாரிப்பு தளத்தையும் அவர் பார்வையிட்டார். அப்போது கர்நாடகா அரசு அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் உடனிருந்தனர்.
நேரில் சந்திப்பு: முன்னதாக இன்று காலை அவர் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் நேரில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக உதயநிதியைச் சந்தித்தாக கூறப்படுகிறது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் கர்நாடகா தொடர்ந்து மோதல் போக்கைக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக இப்போது இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கே இருக்கிறது.
மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மேகதாது பகுதியில் அணை கட்டப்பட்டால் அது தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பாக அமையும் என்பதால் தமிழ்நாடு அரசு இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் அமைச்சர் உதயநிதியை டிகே சிவக்குமார் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்: அரசுமுறை பயணமாகச் சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உதயநிதியின் முகாம் அலுவலகம் குறிஞ்சி இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
மேகதாது: இதற்கிடையே டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடமும் பேசினார். அப்போது உதயநிதி உடனான சந்திப்பில் மேகதாது குறித்துப் பேசினீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டி.கே. சிவக்குமார், கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் நட்பு ரீதியாக உதயநிதியைச் சந்தித்தேன் என்றும் மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிப்போம் என்றும் கூறினார். மேலும், மேகதாது திட்டத்தினால் அதிக பலனடையப் போவது தமிழ்நாடு தான் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னைக்கு வந்ததில் மகிழ்ச்சி என்ற அவர், இன்று காலை திடக்கழிவு மேலாண்மை குறித்துப் பார்வையிட்டதாகவும் கடந்த ஆண்டு ஹைதராபாத் சென்று பார்வையிட்டோம் தற்பொழுது சென்னைக்கு வந்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications