பலபேர் பலவிதமாக ஆசை காட்டுறாங்க.. திருமாவளவன் சொன்ன வார்த்தை.. விஜய்க்கு விசிக ஆதரவில்லையா?
சென்னை: ''பல பேரும் பலவிதமாக ஆசை காட்டுறாங்க.. அது கிடைக்கும். இது கிடைக்கும். அங்கே போனால் வாரலாம்.. இங்கே போனால் அள்ளலாம் என்று நினைப்பவர்கள் சிறுத்தைகளும், இடதுசாரிகளும்'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார். இதனால், விஜய்யின் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 1ம் தேதி நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.993 வரை உயர்ந்தது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.3,237 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட விலையை குறைக்க வலியுறுத்தியும் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், ''மத்திய அரசு எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். கடந்த காலங்களில் இருந்தபடி மானியம் வழங்க வேண்டும்'' என்று கூறினார்.
பலவித ஆசை காட்டுறாங்க
அதன்பிறகு தமிழக அரசியல் பற்றி பேசினார். இதுபற்றி அவர், ''தோழர்களே.. பல பேரும் பலவிதமாக ஆசை காட்டுறாங்க.. அது கிடைக்கும். இது கிடைக்கும். அங்கே போனால் வாரலாம்.. இங்கே போனால் அள்ளலாம் என்று நினைப்பவர்கள் சிறுத்தைகளும், இடதுசாரிகளும். இதை சொல்ல வேண்டியது என்னுடைய பொறுப்பு. ஏனென்றால் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். யூகங்களை எல்லாம் செய்திகளாக்கி கொண்டிருக்கிறார்கள்.
இடதுசாரிகளுடன் சேர்ந்து..
எது சரியோ? எதை செய்ய வேண்டுமோ? அந்த பொறுப்புணர்வுடன் தான் நான் இடதுசாரிகளுடன் சேர்ந்து முடிவெடுப்போம் என்று சொல்லியிருக்கிறேன். அந்த பொறுப்புணர்வுடன் தான் கடந்த 4ம் தேதியே செய்தியாளர்கள் என்னை கேட்டபோது 2016ல் இருந்து நாங்கள் இணைந்தே களமாடி வருகிறோம்.
அவ்வப்போது கருத்தியில் தளத்தில் விவாதித்து கொண்டிருக்கிறோம். செயற்பாட்டு தளத்தில் போராடி கொண்டிருக்கிறோம். தொடர்ந்து அப்படி இயங்க நாங்கள் விரும்புகிறோம். இணைந்து செயல்பட விரும்புகிறோம் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறோம்'' என்றார்.
விஜய் ஆதரவு கோரிய நிலையில் பேச்சு
தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அதுதான் மெஜாரிட்டி. ஆனால் விஜய்யிடம் மெஜாரிட்டி இல்லை. மொத்தம் 108 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் இன்னும் 5 பேரின் ஆதரவு தேவையாக உள்ளது. இதற்கு திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவிடம் உள்ள தலா 2 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 6 பேரிடம் விஜய் ஆதரவு கோரியுள்ளார். அமைச்சர் பதவி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுபற்றி 3 கட்சிகளும் நாளை ஆலோசனை மேற்கொண்டு முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. இதற்கிடையே தான் தற்போது திருமாவளவன், ''பலபேர் பலவிதமாக ஆசை காட்டுகின்றனர். அது கிடைக்கும். இது கிடைக்கும். அங்கே போனால் வாரலாம்.. இங்கே போனால் அள்ளலாம் என்று நினைப்பவர்கள் சிறுத்தைகளும், இடதுசாரிகளும்'' என கூறியுள்ளார். இதனால் தான் விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு வழங்க மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருமாவிடம் ஸ்டாலின் கூறிய வார்த்தை
அதுமட்டுமின்றி தமிழகத்தில் விஜய் மெஜாரிட்டியை எட்டாவிட்டால் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று 2 கம்யூனிஸ்ட் மற்றும் விசிக நிர்வாகிகளுடன் விவாதித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்களிடம் தங்களின் கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதனை வைத்து பார்க்கும்போதும் விஜய்க்கு, திருமாவளவனின் விசிக ஆதரவு வழங்குமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.















Click it and Unblock the Notifications