"இது ரொம்ப தப்பு.. பெண் என பாராமல்.. " தமிழிசை- அமித்ஷா விவகாரம்.. ஜெயக்குமார் கடும் விமர்சனம்
சென்னை: சந்திரபாபு நாயுடு பதவியேற்பு மேடையில் தமிழிசை- அமித் ஷா இடையே நடந்த உரையாடல் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு, ஒரு பெண்ணை மேடையில் வைத்து அவமானப்படுத்தியது தவறு என்றும் மேடை நாகரிகத்தைக் கடைப்பிடிக்காமல் அமித்ஷா நடந்து கொண்டிருப்பதாகவும் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். அவர் கடந்த வாரம் ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். விஜயவாடாவில் நடந்த இந்தச் சம்பவம் தான் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
அமித் ஷா- தமிழிசை விவகாரம்: அதாவது அந்த விழா மேடையில் அமித் ஷா மற்றும் வெங்கையா நாயுடு பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் அவர்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்தார். அப்போது அவரை அழைத்த அமித்ஷா அவரிடம் ஏதோ கேட்கிறார்.. தமிழிசை அதற்குப் பதிலளிக்க இருப்பினும், அதை அமித்ஷா ஏற்க மறுப்பது போலவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்துவது போலவும் அந்த வீடியோ இருக்கிறது.
தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டிப்பது போலச் சைகையைக் காட்டுவதாக இணையத்தில் பலரும் விமர்சித்தனர். இந்தச் சம்பவம் அரசியலில் பெரும் விவாத புள்ளியாக மாறி இருக்கிறது. இதற்கிடையே அமித்ஷா இதுபோல நடந்து கொண்ட விதம் தவறு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.
ஜெயக்குமார்: இது தொடர்பாக அவர் பேசுகையில், "அது உட்கட்சி விவகாரம்.. ஆனால், பொதுவெளியில் மேடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற மேடை நாகரிகம் இருக்கிறது. தமிழிசை என்ன பேசினார்கள்.. அது சரியா இல்லையா என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. எல்லாரும் சொல்வது அண்ணாமலை வந்த பிறகு பாஜக என்பதே சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவிட்டது என்று தான். அதைத் தான் அவரும் சொன்னார்.
அதை அவர்கள் சொல்லிவிட்டார்கள் சரி.. அதற்கு அவர்களை டெல்லி கூப்பிட்டுத் தனியாகக் கண்டித்து இருக்கலாம். ஆனால், பொது மேடையில் வைத்து ஒரு பெண் என்று கூட பார்க்காமல்.. கோபமாகக் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார். அவர் என்ன சொன்னார் என நமக்குத் தெரியாது.
அவமானப்படுத்தியுள்ளனர்: ஆனால், அவரது உடல் மொழியை வைத்துப் பார்க்கும் போது அவர் கோபமாகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியது போலத் தான் தெரிகிறது. உள்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் மேடையில் வைத்து ஒரு பெண்ணை இதுபோல அவமானப்படுத்தி இருக்கக் கூடாது. அது தவறு" என்று அவர் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்த அதிமுக முடிவெடுத்துள்ள நிலையில் அது குறித்த கேள்விக்கு, "இதில் அதிமுக தொண்டர்களுக்கு ஏமாற்றம் எல்லாம் இல்லை.. அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் தான் இருக்கிறது. அது சீக்கிரம் வந்துவிடும்.
இந்த இடைத்தேர்தல் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இத்தனை காலம் விக்கிரவாண்டி எப்படி அதிமுக கோட்டையாக இருந்ததோ 2026ம் ஆண்டிலும் அது தொடரவே செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.
தமிழிசை தந்த விளக்கம்: முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழிசையும் விளக்கமளித்திருந்தார். அதாவது, "அமித் ஷா தேர்தலுக்கு பிந்தைய சூழல், களத்தில் உள்ள சவால்கள் பற்றி என்னிடம் கேட்டார். மேலும், அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளைக் கவனிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்தச் சந்திப்பு தொடர்பான தேவையற்ற யூகங்களுக்கு விளக்கம் அளிக்கவே இதைப் பதிவிட்டுள்ளேன்" என்று தமிழிசை விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications