எடப்பாடியுடன் இணையும் எண்ணம் இல்லை.. ஓபிஎஸ் மீண்டும் வர வேண்டும்.. டிடிவி தினகரன் பேட்டி
சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணையும் எண்ணம் எங்களுக்கு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். என்.டி.ஏ கூட்டணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன்
அதிமுக துணை பொதுச் செயலாளராக 2017 ஆம் ஆண்டு சசிகலாவால் நியமனம் செய்யப்பட்டவர் டிடிவி தினகரன். அந்த சமயத்தில் இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக எழுந்த புகாரில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், 2017 இறுதியில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
டிடிவி தினகரன்
இதையடுத்து, 2024 மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரன், தான் கடுமையாக விமர்சனம் செய்து வந்த பாஜகவுடன் கூட்டணி வைத்தார். 2 இடங்களில் அமமுக போட்டியிட்டு, தோல்வி அடைந்தது. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவும் பாஜகவும் கடந்த ஏப்ரல் மாதம் கூட்டணி அமைத்த நிலையில், அந்தக் கூட்டணியில் தொடர்கிறார் தினகரன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அக்கட்சியின் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று அயனாவரத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
தினகரன் பேட்டி
டிடிவி தினகரன் பேசுகையில், "நான் பெரிதும் மதிக்கும் அரசியல் கட்சி தலைவர் திருமாவளவன். கடந்த ஓராண்டு காலமாகவே அவர் பேச்சில் சில குழப்பங்கள் தெரிகிறது. தன்னிச்சையாக ஒரு கருத்தை தெரிவிக்கிறார். அதற்கு எதிர்ப்பு வந்தால் நான் அப்படி சொல்லவில்லை, நீங்கள் தவறாக புரிந்து கொள்கிறீர்கள் என தலைகீழாக மாற்றி பேசுகிறார். சமீபத்தில் அவர் எம்ஜிஆர் குறித்து பேசியதும் அதுபோல்தான். தெளிவற்ற கருத்துகளை முன்வைக்கிறார்.
முன்பு இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் போல் இப்போது இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லை. எம்எல்ஏ, எம்பி இடங்களுக்காக தற்போதுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் சமரசம் செய்து கொள்கின்றனர்" என்றார்.
எடப்பாடி உடன் இணைவீர்களா?
மேலும் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், "எங்களுக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கி 7 ஆண்டுகள் முடிந்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். அமமுக எந்த இலக்கை நோக்கி தொடங்கப்பட்டதோ அந்த இலக்கை அடையும் வரை எங்களுடைய பயணம் ஓயாது. தீய சக்தி திமுகவை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ஒரே குடையின் கீழ் பல சண்டை சச்சரவுகளை தாண்டி ஒன்றிணைந்துள்ளோம்" என்றார்.
ஓபிஎஸ் மீண்டும் வர வேண்டும்
தொடர்ந்து, "ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும், பாஜகவின் டெல்லி தலைவர்கள் அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். பி.எல்.சந்தோஷ் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவரை மீண்டும் கூட்டணிக்குள் அழைத்து வந்தால் மகிழ்ச்சிதான். கடந்த ஒரு வருடமாக நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறேன். தேவை ஏற்பட்டால் பாஜக தலைவர்களை நேரில் சந்திப்பேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு பிறகு வந்த ஆட்சிகளிலேயே மிக மோசமான ஆட்சி தற்போது நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சிதான். வருகிற 2026ஆம் தேர்தலில் திமுக ஆட்சி நிச்சயம் வீழ்த்தப்படும். திமுக திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி விளம்பரப்படுத்தி கொள்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் தான் துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர்" என்றார்.
சட்டசபை தேர்தலில் போட்டி
2026 சட்டசபை தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தினகரன், "மற்ற கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர் என்பதற்காக நாங்களும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்ற அவசியமில்லை. உரிய நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவோம். வருகிற சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேன். ஆனால் எந்த தொகுதி என்று தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications