"மக்களுக்கு உயிர் முக்கியம்" என பழனிச்சாமி மிரட்டுகிறாரா.. டிடிவி தினகரன் தாக்கு
முதல்வரின் 8 வழிச்சாலை குறித்த பதிலுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது ' மக்களுக்கு உயிர் முக்கியம், அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்' என்று முதல்வர் எடப்பாடி மிரட்டும் தொனியில் பேசியுள்ளதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கடந்த வருடம், 8 வழிச்சாலை திட்டம் கொண்டுவந்தபோது தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் கிளம்பின. இதையடுத்து இந்த திட்டம் சம்பந்தமான அடுத்தக்கட்ட வேலைகள் எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், நேற்று சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, சேலம்-சென்னை 8 வழிச்சாலை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

நாட்டு நலன்
அதற்கு முதல்வர் பதிலளித்தபோது, "புதிய சாலைகள் அமைப்பது மக்களின் நன்மைக்காக செய்யப்படுவது. விபத்துக்கள் தவிர்க்கப்படும். எரிபொருள் மிச்சப்படுத்தப்படும் 100 சதவீதத்தில் வெறும் 7 சதவீத மக்கள்தான் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு சொல்கிறார்கள். நாட்டு நலனுக்காக அவர்கள் தங்கள் நிலங்களை வழங்க முன்வரவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

கண்டனங்கள்
முதல்வரின் இந்த கருத்து பல்வேறு தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அறிக்கை வாயிலாக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
|
நயவஞ்சகம்
இப்போது தனது ட்விட்டர் பக்கத்திலும் 2 ட்வீட்கள் மூலமாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், "சோறு போடுகின்ற விவசாய நிலங்களையும், ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் அழித்து, கார்பரேட் முதலாளிகளின் நலனுக்காக 8 வழிச்சாலை போட துடிக்கின்ற பழனிச்சாமியின் நயவஞ்சகம் நிச்சயம் நிறைவேறப் போவதில்லை. இவர்களுக்கு மக்கள் எழுதியுள்ள முடிவுரை மே 23 ஆம் தேதி தெரிந்துவிடும்" என்று ஒரு பதிவு போட்டுள்ளார்.
|
உண்மை முகம்
"8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது ‘ மக்களுக்கு உயிர் முக்கியம் ; அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்' என்று திடீரென மிரட்டும் தொனியில் வசனம் பேசியிருக்கிறார் பழனிச்சாமி. இதுதான் இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களின் உண்மை முகம்" என்று மற்றொரு ட்வீட் போட்டு முதல்வரை தாக்கி உள்ளார் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications