ஒரு வரிக்கே குதிச்சீங்களே..இது என்ன? ஸ்டாலின் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மிஸ்! அன்புமணி அட்டாக்
சென்னை: கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிப்பு கண்டிக்கத்தக்கது எனவும், இதற்கு மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு புதிய திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

முதல் கட்டமாக நேற்று முதல் கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளதோடு பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். கோவை சுகுணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டதால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோவை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியிலும், மற்றொரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்கு மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," கோவையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகிய இரு பாடல்களும் பாடப்படவில்லை. அன்னை தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் வகையிலான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் கடந்த 17.12.2021-ஆம் நாள் வெளியிடப்பட்ட 1037 என்ற எண் கொண்ட அரசாணையின் 7(இ) பிரிவின்படி, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு பிறப்பித்த ஆணையை முதலமைச்சரே மீறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
திருப்பூரில் கடந்த 10.02.2019-ஆம் நாள் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி கண்டித்தார். அதன்பின் கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்னையில் ஆளுனர் பங்கேற்ற சென்னைத் தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு வரி விடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,''திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்" என்று ஆளுனரை விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் தாம் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருந்துமா? என்பதை அவர் தான் கூற வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதை தமிழ்நாட்டில் உள்ள தமிழுணர்வு மிக்க குடிமக்களால் சகித்துக் கொள்ள முடியாது. கோவையில் செவ்வாய்க்கிழமை தாம் பங்கேற்ற இரு அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்யாததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இனிவரும் காலங்களில் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் தவறாமல் இசைக்கப்படுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications