ராகுல் காந்திக்கு மிகப் பெரிய தண்டனை! பாஜக அவசரத்தை தவிர்த்திருக்கலாம்! -அன்புமணி ராமதாஸ்
சென்னை: ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருப்பது மிகப் பெரிய தண்டனை என்றும் பாஜக அவசரத்தை தவிர்த்திருக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி வைத்த அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார்.
மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து அன்புமணி பேசியதாவது;

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்
''ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க ஆளுநருக்கு என்ன தயக்கம் என தெரியவில்லை. ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கு ஆதராவாக செயல்படுகிறாரோ என சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 35 ஆயரம் மெகாவாட்டாக உள்ளது, என் எல் சி நிறுவனத்தின் மின்சாரம் தேவைப்படாது, தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது, நிலத்தை தரமாட்டோம் என விவசாயிகள் போராடி வருகின்றனர், ஒரு பக்கம் தமிழக அரசு வேளாண்மைக்காக சிறப்பு பட்ஜெட் என அறிவித்து விட்டு, அதே நேரத்தில் விவசாயிகளுக்கு எதிராக செயல்படலமா?.''

வேளாண்துறை அமைச்சர்
''தமிழக வேளாண்துறை அமைச்சர் அதிகம் பேசுவதை நிறுத்தி விட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பேச வேண்டும். என்எல்சி மூன்றாவது நிலக்கரி திட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சரின் சொந்த கிராமமான முட்டம் கிராமமும் வருகிறது, இது அமைச்சருக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை, ஏற்கனவே என்.எல்.சிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கே வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.''

ராகுல்காந்தி
''ராகுல்காந்திக்கு வழங்கியிருப்பது என்பது பெரிய தண்டனை. நீதிமன்றமும் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும், என்னை பொறுத்தவரை நீதிமன்ற தண்டனை என்பது தவறு தான், அவசரப்பட்டு பதவியை பறித்திருப்பதை பாஜக அரசு தவிர்த்திருக்க வேண்டும்.''

மது விற்பனை
''இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மது விற்பனை அதிகம். உத்தர பிரதேச மாநிலத்தில் மக்கள் தொகை 24 கோடி ஆனால் அங்கு மது விற்பனை 17 ஆயிரம் கோடி தமிழகத்தில் மக்கள் தொகை ஏழே முக்கால் கோடி ஆனால் மது விற்பனை 45 ஆயிரம் கோடி, இருந்தும் அடுத்த ஆண்டு 50000 கோடியை இலக்காக அறிவித்திருப்பது வெட்கக்கேடு. மது விற்பனையை குறைக்க தான் அமைச்சராக இருக்கிறார், ஆனால் அதை அமைச்சர் சரியாக புரிந்து கொள்ளவில்லை.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications