சாதிவாரி கணக்கெடுப்பு! எம்.ஜி.ஆர் முதல் ஸ்டாலின் வரை.. 44 ஆண்டுகால போராட்டம்! -அன்புமணி ராமதாஸ்
சென்னை: எம்.ஜி.ஆர். தொடங்கி ஸ்டாலின் வரை தமிழ்நாட்டின் அனைத்து முதலமைச்சர்களையும் சாதி வாரிக்கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சாதி வாரி கணக்கெடுப்பு: சமூக நீதி காக்க சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தரங்கில் பேசிய போது இதனைக் கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி இன்று நேற்றல்ல 44 ஆண்டுகளாக ராமதாஸ் போராடி வருவதாக தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு எல்லா வகையிலும் உரிமை இருக்கின்ற போது சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன வினவினார்.

தமிழ்நாடு முன்னேறும்: ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியின் முன்னேற்றத்துக்காக தாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரவில்லை என்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவே இதனை வலியுறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். பெரிய பெரிய தொழிற்சாலைகளையும், ஐடி கம்பெனிகளையும் நிறுவினால் மட்டும் போதுமா அதனால் மட்டும் தமிழ்நாடு முன்னேறிவிடுமா எனவும் வினவினார். நிச்சயம் கிடையாது என்று பதிலளித்த அவர், பின் தங்கிய சமுதாயம் முன்னேறிய சமுதாயத்திற்கு நிகராக வந்தால் மட்டுமே தமிழ்நாடு முன்னேறும் என பேசியுள்ளார்.
சமூகநீதியின் பிறப்பிடம்: சமூகநீதி சமூகநீதி என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் தமிழ்நாட்டில், சமூகநீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு என்று கூறிக்கொள்பவர்கள் சமூக நீதியை முடக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என வேதனையை பதிவு செய்துள்ளார். ஸ்டாலினை பொறுத்தவரை 50 ஆண்டுகால உழைப்புக்கு பிறகு முதலமைச்சராக வந்தவர் என்றும் ராமதாஸ் ஒன்று கூறுகிறார் என்றால் அது சரியாக தான் இருக்கும் எனக் கருதியவர் கருணாநிதி என்றும் அவர் வழியில் வந்துள்ள ஸ்டாலினும் ராமதாஸ் கேட்கும் சாதிவாரி கணக்கெடுப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஏன் கேட்க வேண்டும்? சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்வதையெல்லாம் நாங்க கேட்க முடியாது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் 2 நாட்களுக்கு முன்னர் பேசியிருந்த நிலையில் ராமதாஸ் சொல்வதை கருணாநிதியே காதுகொடுத்துக் கேட்டு அதனை நிறைவேற்றிக் கொடுப்பார் என்பதை இன்றைய கருத்தரங்கில் பதிலாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications