சாயும் இலைகள்.. சமரசம் செய்யும் தலைகள்! அடிச்சு சொல்லும் அண்ணாமலை - நயினார் தெரிவித்த அதே மேட்டர்
சென்னை: தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மூத்த தலைவர்களான எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாஜகவுடன் அக்கட்சியின் கூட்டணி தொடருமா என்ற கேள்வியும் எழுந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஒரே மாதிரியான கருத்தை தெரிவித்து உள்ளார்கள்.
ஜெயலலிதாவின் மறைவு, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ஆகியவற்றை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அதிமுக வந்தது.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராகவும் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்தனர்.

அதிமுக தோல்வி
ஜெயலலிதா இருக்கும் வரையில் எந்த பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு வந்த அதிமுக, 2019 மக்களவைத் தேர்தலிலும், அடுத்து நடைபெற்ற 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. தமிழ்நாட்டில் இந்த 2 தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை தழுவியது.

உட்கட்சிப்பூசல்
இந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றை தலைமை தொடர்பாக உட்கட்சிப் பூசல் தொடர்ந்து வருகிறது. நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் கட்சி, சின்னம் யாருக்கு சொந்தம் என்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதனால் இரண்டு தலைவர்களும் டெல்லி தலைமையின் உதவியையே நாடி இருப்பதாக கூறப்பட்டது.

அதிமுக - பாஜக கூட்டணி
தற்போது வரை ஓ.பன்னீர்செல்வம் பாஜக ஆதரவு நிலைபாட்டில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களாகவே பாஜக எதிர்ப்பு நிலைபாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வது சிக்கல் என்று பேசப்பட்டு வந்தது. இந்த பாஜகவின் இரு தலைவர்கள் இது தொடர்பாக வாய் திறந்து இருக்கிறார்கள்.

நயினார் நாகேந்திரன்
தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டு நடுவம் சார்பில் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதிய ஜனதா கட்சியும் எப்போதும் கூட்டணியில் இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை
"எங்கள் கூட்டணியில் எந்த விதமான கருத்து மனமாச்சியமும் கிடையாது. நான் செல்வது பேரறிஞர் காட்டும் பாதை என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகிறேன். நான் பாஜக வந்து 6 வருடங்கள் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். கடந்து வந்த பாதையை மறந்து விடக்கூடாது என்று தான் பேரறிஞர் காட்டும் பாதை என சொல்கிறேன்." என்றார்.

அண்ணாமலை விளக்கம்
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் வட்டார இந்து சமுதாயம் மற்றும் ஆலய நிர்வாகங்கள் சார்பில் 19 வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "பாஜக 2024 தேர்தலில் கொள்கை சார்ந்த கூட்டணி அமைக்கும். திமுகவைபோல் சந்தர்பவாத கூட்டணி அமைக்காது. அதிமுக பாஜக இடையே மும்மொழி கொள்கை, புதிய கல்வி கொள்கை போன்றவற்றில் பிரச்சனை உள்ளது. இருப்பினும் ஒரே கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படும்." என்றார்.












Click it and Unblock the Notifications