சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா?
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், கோவை அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இன்றே பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை முழு வேகத்தோடு மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக ஆளும் கட்சியான திமுக, எதிர்க் கட்சியான அதிமுக, மற்றும் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை களத்தில் செயல்படுத்த காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், திமுகவும் அதிமுகவும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை கிட்டத்தட்ட நிறைவு செய்துள்ளன. அதிமுக தரப்பில் இன்று காலை முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 27 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
அந்த பட்டியலில், பாஜக முக்கிய தலைவர்களுக்கு தமிழகத்தில் சில முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தற்போதைய பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
அதேபோல், முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை மீண்டும் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் களம் இறங்க வாய்ப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அண்ணாலை கொங்கு மண்டலத்தில் (கரூர்) போட்டியிட்ட நிலையில், மக்களவை தேர்தலில் கோவையில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார். இதனால் இந்த முறை மீண்டும் கோவையில் அவரை களமிறக்க பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கோவை மற்றும் கொங்கு பகுதிகளில் பாஜக வாக்கு வங்கி வளர்ச்சி பெற்றுள்ளதாக அக்கட்சி நம்பும் நிலையில், கோவை மட்டும் இரு முக்கிய தலைவர்கள் களம் காண்கின்றனர். அந்த வகையில், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரரான சென்னையிலும்,விஜயதாரணி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானதும், அந்தந்த தொகுதிகளில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் அண்ணாமலை மீண்டும் போட்டியிடுவாரா என்பது குறித்து கட்சித் தொண்டர்களும், அரசியல் பார்வையாளர்களும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications