11 நாள் விரதத்தில் பிரதமர்.. புனித பணியில் ஈடுபட்டுள்ள மோடிக்கு வாழ்த்து சொல்வோம்: அண்ணாமலை அழைப்பு!
சென்னை: நமோ செயலி இணைப்பு மூலம், அனைவரும் நமது பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை கூறுமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக நாள் நெருங்கிவரும் நிலையில், நேற்று பிரதமர் மோடி சிறப்பு விரதத்தையும் பூஜைகளையும் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி, கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த சுபநிகழ்ச்சிக்கு நானும் சாட்சியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி, ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வுக்காக 11 நாட்கள் விரதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மேற்கொள்ளும் 11 நாள் விரதத்தில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து, கடவுள் முன் தீபம் ஏற்றிய பிறகு, தியானத்தில் அமர்ந்து மந்திரம் சொல்வார். சாத்வீக உணவு மற்றும் பெரும்பாலும் பழங்களை சாப்பிடுவார். மேலும் பல்வேறு ஆன்மீக தளங்களுக்குச் சென்றும் வழிபாடு நடத்துவார். பிரதமர் மோடி விரதம் இருக்கும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, தமிழக மக்களையும் வாழ்த்து கூற அழைப்பு விடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வரும் ஜனவரி 22ஆம் தேதி, அயோத்தியில், பகவான் ஶ்ரீராமர் திருவுருவச் சிலை, நமது பிரதமர் மோடி திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. இதனை அடுத்து, நமது பிரதமர் அவர்கள், நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, பல தலைமுறைகளாக, பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, எண்ணற்றோரின் தியாகம் நிறைவேறும் திருநாள், வரும் ஜனவரி 22.
அயோத்தியில் பகவான் ஶ்ரீராமர் திருவுருவச் சிலையை, பிரதிஷ்டை செய்யும் புண்ணிய வாய்ப்பு தமக்குக் கிடைத்திருப்பதாகவும், பாரதம் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் பக்தர்களின் பிரதிநிதியாக, அந்தப் புனிதமான பணியை மேற்கொள்வது, ஶ்ரீராமரின் வரம் என்றே கருதுவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த இறை பணியில், தாம், பாரதத்தின் 140 கோடி மக்களுக்கான ஒரு கருவி மட்டுமே என்றும் நமது பிரதமர் குறிப்பிட்டார்.
வரும் ஜனவரி 22 அன்று, அயோத்தியில், பகவான் ஶ்ரீராமர் திருவுருவச் சிலை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. இதனை அடுத்து, நமது பிரதமர் அவர்கள், நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்… pic.twitter.com/g4Hv7OpjVY
— K.Annamalai (@annamalai_k) January 12, 2024
மேலும், இந்தப் புனிதமான பணியை மேற்கொள்ளவிருப்பதால், வரும் 11 நாட்களும் நமது பிரதமர் விரதம் மேற்கொள்ள இருப்பதாகவும், ஶ்ரீராமர் வசித்த நாசிக்கில் உள்ள புனிதத்தலமான பஞ்சவடியில் இருந்து விரதத்தைத் துவங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். பாரதத்தில் ஆன்மீக விழிப்புணர்வைத் தட்டி எழுப்பிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான இன்று, இதனை அறிவிப்பது பொருத்தமானதாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நமது பிரதமர் அவர்கள், ஶ்ரீராமர் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்யும் புனிதப் பணியில், தமக்கு நாட்டு மக்கள் அனைவரின் ஆசிகளும், வாழ்த்துக்களும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பல கோடி மக்களின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் பல ஆண்டுகள் போராடி நிறைவேற்றவிருக்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் கூறுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். கீழ்க்காணும் பாரதப் பிரதமரின் நமோ செயலி இணைப்பு மூலம், அனைவரும் நமது பாரதப் பிரதமருக்கு வாழ்த்துக்களை கூறுமாறு வேண்டிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications