அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவாரா? அண்ணாமலை சொன்ன பதிலை பார்த்தீங்களா?
சென்னை: அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்ற கேள்விக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணியின் உருவப்படத்திற்கு அண்ணாமலை அஞ்சலி செலுத்த வந்த போது இந்த கருத்தை கூறியிருந்தார்.
பிரேமலதா, சுதீஷின் தாய் அம்சவேணி, கடந்த செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார். அவருக்கு வயது 83. அவருடைய உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்பி கனிமொழி, நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கரு நாகராஜன், விஜயதாரணி, ஜி.கே.மணி உள்ளிட்டோர் நேரில் போய் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் பிரேமலதாவின் தாயார் அம்சவேணியின் உருவப்படத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், கரூர் என் ஊர், இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தமிழகத்தில் பாதுகாப்பான ஊர். விஜய் நேராக கரூர் செல்ல உரிமை உள்ளது. அவர் யாரிடத்திலும் அனுமதி கேட்க தேவையில்லை என்பது என் கருத்தாக உள்ளது.
இறப்பு வீட்டிற்கு வருவோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கரூர் மக்களுக்குத் தெரியும். அதிமுக கூட்டத்தில் தவெகவினர் வருகை குறித்து கேட்கிறீர்கள். தேர்தலுக்கும் கூட்டணிக்கும் அவகாசம் நிறைய உள்ளது.
அதுபோல் அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். திருமாவளவனுடன் வந்தவர்கள் வழக்கறிஞரை தாக்கியது தவறான செயல். வழக்கறிஞர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு திருமாவளவன்தான் பொறுப்பு.
இன்னும் நட்பில் உள்ள ஆதவ் அர்ஜுனாவை தவெகவுக்கு அனுப்பிவிட்டு பாஜகவை திருமாவளவன் திட்டுகிறார். விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகள் வேறு எங்கோ செல்வதால் அவர் பதற்றப்படுகிறார்.
கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்தது சரிதான். பரிந்துரைத்த பட்டியலில் கருணாநிதி பெயர் இருக்கும் போது எம்ஜிஆர் பெயர் ஏன் இல்லை? தலைவர்கள் பெயர் விடுபட்டதால் ஜாதி பெயர்களை நீக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும்.
பள்ளிகளில் "உங்களுடன் முகாம்" நடத்துவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார். அது போல் இன்னொரு பேட்டியில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: கரூர் விவகாரத்தை பொறுத்தவரை, விஜய் மீது வழக்கு போட்டு, குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் என்றால் அந்த வழக்கே நிற்காது. கொஞ்சமாவது சட்டம் தெரிந்த யார் வேண்டுமானாலும் சொல்வார்கள். அல்லு அர்ஜூன் வழக்கு அப்படித்தான் ஆனது. அவர்கள் மீது வழக்கே பதிவு செய்ய முடியாது.
தமிழ்நாடு யாருக்கு எதிராக போராடும் என்று கவர்னர் கேட்கும் கேள்வி சரிதான். இன்றைக்கு அவர்கள் போராடி கவர்னரை மாற்ற முடியுமா? அந்த பொறுப்பே இல்லாமல் செய்துவிட முடியுமா? அப்படி முடியாது. மக்களை வேண்டும் என்றே தூண்டிவிட்டு, மக்களை ஒரு போராட்ட மனநிலைக்கு திமுக கொண்டு செல்கிறது. இது ஒரு ஆளுங்கட்சி செய்யவேண்டிய வேலையே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications