சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார்.. அதிமுகவுக்கு அண்ணாமலை பதிலடி! பரபர!
சென்னை: சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில் திராவிட இயக்கத்தினர், அதிமுகவினர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது அண்ணாமலை - அதிமுக இடையே மோதலாக வெடித்துள்ளது.

சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பாஜக சார்பில் சென்னையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா குறித்துப் பேசிய சில கருத்துகள் சர்ச்சையானது. இந்நிலையில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
சி.வி.சண்முகம் பேசுகையில், "பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் தமிழகம் இல்லை, நீயும் இல்லை நானும் இல்லை. ஆறு சதவீதம் மட்டுமே நாட்டை ஆண்டிருப்பார்கள். மீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிறபடுத்தப்பப்பட்ட மக்கள் இன்றைக்கு கூலித் தொழிலாளியாக வாழ்ந்திருப்பார்கள், ஆனால் இந்த சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், இன்றைக்கு புதிது புதிதாக எல்லாம் தலைவர்கள் வந்துள்ளார்கள். அறிஞர் அண்ணாவை விமர்சனம் செய்து பேசி
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா பற்றி தரக்குறைவாக பேசி உள்ளார். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ, உங்களை நீங்க அறிவு ஜீவியாக நினைத்துக்கொண்டு எல்லாம் தெரியும் என பேசிய உள்ளார். அண்ணாமலையின் வயது 40 கூட இன்னும் முடியவில்லை. அண்ணாமலை சொல்லும் சம்பவம் நடந்து 74 ஆண்டுகள் ஆகிறது, உங்கள் வயது 40. அப்போது உங்களுடைய அப்பா அம்மாவுக்கு திருமணம் கூட ஆகி இருக்காது.
அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என அவருடைய தேசிய தலைமை அறிவித்துள்ளது. பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமியை டெல்லிக்கு வரவழைத்து அருகிலேயே அமர வைத்து பேசுகிறார். என்டிஏ கூட்டணியில் பாஜகவிற்கு அடுத்து உள்ள மிகப்பெரிய கட்சி அதிமுக, இதனை தேசிய தலைவர்கள் புரிந்துள்ளார்கள். ஜேபி நட்டா, மோடி, அமித்ஷா ஆகியோருக்கு அதிமுகவின் அருமை தெரிந்துள்ளது.
ஏன் உங்களுக்கு தெரியவில்லையா, கண் தெரியவில்லையா காது கேட்கவில்லையா? கூட்டணியில் இருந்து கொண்டே அண்ணாவின் பெயரில் இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை விமர்சிப்பதா? 2 கோடி தொண்டர்களின் தெய்வம், அண்ணாவை தரம் தாழ்ந்து பேசுகிறீர்கள், அண்ணாமலைக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் தலைவி ஜெயலலிதாவை விமர்சனம் செய்தார். இன்றைக்கு பேரறிஞர் அண்ணாவை விமர்சனம் செய்துள்ளார்.
அண்ணாமலையின் செயல்பாடு கூட்டணி தர்மத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அண்ணா பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும்? தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறக் கூடாது என அண்ணாமலை திட்டமிடுகிறாரோ என சந்தேகம் வருகிறது. திமுக உடன் கைகோர்த்து அண்ணாமலை செயல்படுகிறாரோ? அண்ணாமலை செல்வது பாதயாத்திரையா, வசூல் யாத்திரையா எனத் தெரியவில்லை. தன்னுடைய இருப்பைக் காட்ட இதுபோல் செயல்படுகிறார். அண்ணாமலை இது உங்களுக்கு இறுதி எச்சரிக்கை. இனியும் தொடர்ந்தால் அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்று எச்சரிக்கும் வகையில் பேசினார் சி.வி.சண்முகம்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, சி.வி.சண்முகத்தின் காட்டமான விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார். அண்ணாமலை பேசுகையில், "அண்ணாதுரையை நான் தவறாக சொல்லவில்லை, சரித்திரத்தில் இருந்ததை எடுத்துக் கூறியிருக்கிறேன். நான் யாருடைய அடிமையும் கிடையாது. கும்பிடு போட்டுக்கொண்டு அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
சுயமரியாதை உள்ள கட்சி பாஜக, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது. என்னை செருப்பால் அடித்தால் கூட பொறுத்துக்கொள்வேன். ஆனால் எனது நேர்மையை குறை சொன்னால் சும்மா விட மாட்டேன். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு இது புரியாது. அவர்கள் மந்திரிகளாக இருந்ததே வசூல் செய்யத்தான்.
அதனால், நான் நடைபயணம் செல்வது வசூல் செய்யத்தான் என நினைக்கிறார்கள். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு நேர்மையின் அர்த்தம் தெரியாது. நல்ல போலீஸை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். இந்த தலைவர் பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டு பேசுகிறார்.
சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். அதைப் பற்றி எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது. சில தலைவர்களுக்கு கள அரசியல் மாறிவிட்டது என புரிய வைக்க இன்னும் 10 ஆண்டுகள் வேண்டும்." எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications