செங்கோட்டையன் கருத்துக்கு ஆதரவாக அண்ணாமலை? ஓபிஎஸ், டிடிவி வேணுமாம்! சொன்ன மேட்டரை கவனிச்சீங்களா?
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளனர். இதற்கிடையே, செங்கோட்டையன், அதிமுகவில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஓபிஎஸ், டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை தமிழக பாஜக தலைமை கண்டு கொள்ளவும் இல்லை.

ஓபிஎஸ், டிடிவி அதிருப்தி
இதையடுத்து அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அடுத்தடுத்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினர். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தான் காரணம் எனத் தெரிவித்தார் டிடிவி தினகரன். நயினார் நாகேந்திரன் கூட்டணிக் கட்சிகளை சரியாக கையாளவில்லை என்றும், அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தவரை சரியாக நடந்தது என்றும் கூறினார் டிடிவி தினகரன்.
இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று 10 நாட்கள் கெடு விதித்து, செப்டம்பர் 5 ஆம் தேதி பேசியிருந்தார். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்கினார். ஒருங்கிணைப்பு பணிகளை தொடர்வேன் என செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அத்துடன் டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துவிட்டுத் திரும்பியுள்ளார்.
அண்ணாமலை பேட்டி
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ் மீண்டும் வர வேண்டும், கூட்டணியில் தொடர வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். வருத்தத்தில் ஒரு முடிவை எடுத்திருப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும், விரைவில் அவை முடிவுக்கு வரும். பொறுத்திருப்போம், காலம் கனிந்து வரும்.
டி.டி.வி.தினகரன் ஒரு நல்ல தலைவர் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்காது. தமிழகத்தில் பாஜகவை வழிநடத்தும் நயினார் நாகேந்திரன்தான் எங்களது தலைவர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் ஏன் அவசரப்பட வேண்டும்?" எனத் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையனுக்கு அண்ணாமலை ஆதரவு?
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் குரல் எழுப்பி வரும் சூழலில், அவரது கருத்தையே அண்ணாமலையும் பிரதிபலித்துள்ளார். ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் எனக் கூறியுள்ளார் அண்ணாமலை. இதன் மூலம் இந்த விவகாரத்தில் அண்ணாமலை, செங்கோட்டையனுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications