அண்ணாமலை உளப்பூர்வமா இப்படி பேசியிருக்க மாட்டார்.. அவருக்கே நல்லா தெரியும்.. பொன்முடி சொன்ன வார்த்தை!
சென்னை: பெரியார் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பெரியார் இல்லையென்றால் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்திருக்க முடியாது. செய்தியில் வர வேண்டும் என்பதற்காகத்தான் அண்ணாமலை இப்படி பேசி இருப்பார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் கடந்த ஜூலை 28ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைபயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பாதயாத்திரையில் பங்கேற்று, அங்கு மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, "1967 ஆம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலின் வெளியே ஒரு பலகையை வைத்தனர். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று ஒரு பலகையை வைத்துள்ளனர். இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பாஜக ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக அந்த கம்பமும், பலகையும் அப்புறப்படுத்தப்படும்." என்றார்.

மேலும், "அவற்றை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் முன்பிருந்த்ம் அகற்றி காட்டுவோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்" என்று சூளுரைத்தார் அண்ணாமலை.
இதற்கு திமுக, அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்வினைகள் எழுந்தன. இதையடுத்து நேற்று திருச்சி மாநகரில் நடைபெற்ற பாதயாத்திரையைத் தொடர்ந்து, பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் கோவில் முன்பாக பேசும்போது ஒன்றைச் சொன்னேன். 2026ல் மக்கள் ஆசி பெற்று பாஜக ஆட்சிக்கு வரும்போது, முதல் காரியமாக கோவிலுக்கு வெளியே இருக்கும் ஒரு பலகையை அகற்றுவோம் எனக் கூறினேன்.
கோவிலுக்குச் செல்லும் அனைவருமே பக்தியோடு செல்வார்கள். கோவில் வாசலுக்கு போகும்போது, இதைப் படித்துவிட்டுத்தான் போக வேண்டும் என திமுக அரசு ஒன்றை வைத்துள்ளது. கடவுளை நம்புபவன் முட்டாள், காட்டுமிராண்டி என்பது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதைப் பார்க்காமல் கோவிலுக்குள் யாரும் செல்ல முடியாது. அதன் காரணமாகவே, அந்த வாக்கியம் இருக்கும் பலகை அந்த இடத்தில் இருக்காது எனக் கூறினேன்.
திமுகவினர், அமைச்சர்கள் காலை முதல் மாற்றி மாற்றிக் கதறிக் கொண்டிருக்கிறார்கள். நம் அரசியல் வளர்ச்சி அரசியல். சிலையை உடைக்கும் அளவுக்கு நாங்கள் கேவலமானவர்கள் கிடையாது. சிலையாக இருந்தாலும் சரி, வாசகமாக இருந்தாலும் சரி, பொது இடத்தில் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கும். அப்புறப்படுத்தப்படும் எல்லா சிலைகளும் பொது இடங்களில் வைக்கப்படும். அவரவருக்கு பிடித்த தலைவர் சிலைகளுக்குப் போய் மாலை போட்டுக் கொள்ளலாம். சிலையை உடைப்பவர்களும், திருடுபவர்களும் நீங்கள் தான். நாங்கள் இல்லை." எனப் பேசினார்.
இந்நிலையில் இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, "நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்களும் உறுதியாக இருக்கிறார்கள், நாங்களும் உறுதியாக இருக்கிறோம். அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக ஆனதற்கு காரணமாக இருந்தவரே பெரியார்தான். பெரியார் இல்லையென்றால் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகியிருக்க முடியாது. தமிழ்நாட்டில் இன்று எல்லா சமூகத்தினரும் படிக்கிறார்கள் என்றால் அது பெரியார் போட்ட விதை தான்.
பெரியார் சிலை பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மையில் சமூகத்தின் மீது மக்கள் மீது பற்றுள்ள அனைவருமே பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளனர். செய்தியில் வர வேண்டும் என்பதற்காகத்தான் அண்ணாமலை இப்படி பேசி இருப்பார். உண்மையில் அவரே மனப்பூர்வமாக இப்படி பேசி இருக்கமாட்டார். பெரியார், அண்ணா, கருணாநிதி, காமராஜர் ஆகியோர் இந்த மக்களுக்காக, பெண்ணுரிமைக்காக பாடுபட்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். வட இந்தியாவில் உள்ளவர்கள் கூட பெரியாரை ஏற்று கொண்டுள்ளனர்." என்றார்.












Click it and Unblock the Notifications