"ஹிந்தி தெரியாது போடா” என்ற டீ-ஷர்ட்டில் ஸ்டாலின் பீகார் செல்ல முடியுமா? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
சென்னை: ராகுல் காந்திக்கு ஆதரவாக பீகார் சென்ற முதல்வர் ஸ்டாலின் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு வைத்து பேசினார். இந்த நிலையில் பீகார் சென்ற முதல்வர் ஸ்டாலினை தமிழக மூத்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்து பேசியுள்ளார். ஹிந்தி தெரியாது போடா என்ற டீஷர்ட் அணிந்தபடி பீகார் செல்ல முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 'வாக்காளர் அதிகாரம்' என்ற பெயரில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். பீகார் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் குறைபாடுகள், குற்றச்சாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

பீகாரில் ஸ்டாலின் பேச்சு
பீகாரில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்து வந்தார். தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில் தற்போது அவர் மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் பீகார் மாநிலம் தர்பங்காவில் இன்று நடந்த யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
பீகாரில் பாஜக தோற்றுவிடும்
ராகுல் காந்தியோடு, கனிமொழி எம்பியும் பங்கேற்றார். பிரியங்கா காந்தி எம்பி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது பேசிய ஸ்டாலின், "பீகார் தேர்தலில் பாஜக தோற்க போகிறது. ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ் பீகாரில் வெற்றியை கொடுப்பார்கள். இதன் காரணமாகவே இந்த வெற்றியை தடுக்க முயற்சி நடக்கிறது. நியாயமாக தேர்தல் நடந்தது என்றால், பாஜக தோற்றுவிடும்.
எனவே தான் மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனர். பீகாரில் 65 லட்சம் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணிலேயே பிறந்து வாழ்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினால், அதைவிட ஒரு பயங்கரவாதம் இருக்க முடியுமா? அனைத்து அடையாள அட்டைகளை வைத்திருந்தும் அவர்கள் முகவரி இல்லாதவர்களாக ஆகிவிட்டனர்" என்று பேசியிருந்தார்.
தமிழிசை சவுந்தரராஜன் அட்டாக்
இந்த நிலையில் ஹிந்தி தெரியாது போடா என்று சொல்கின்ற முதல்வர் ஸ்டாலினால், ஹிந்தி தெரியாது போடா டிஷர்ட்டோடு பீகார் செல்ல முடியுமா என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழிசை கூறியதாவது:- எங்களை பார்த்து தமிழ் விரோதிகள், வட மாநிலங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்போம் என்று குற்றச்சாட்டு சொல்பவர்கள் தான் இன்று பீகாருக்கு சென்றிருக்கிறார்கள். தென் மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
ஹிந்தி தெரியாது போடா
ஹிந்தி தெரியாது போடா என்று சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின், இன்று அதே டீஷர்ட் அணிந்து கொண்டு பீகார் செல்ல முடியுமா?.. பீகாருக்கு சென்று ஸ்டாலின் பிரசாரம் செய்ததால் அங்கு பாஜக கூட்டணி வெற்றி பெறும்.. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னது புதிராக உள்ளது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினா.ர்












Click it and Unblock the Notifications