தங்கம் வாங்க போறீங்களா.. ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் கட்டாயம்.. அரசின் அறிவிப்பால் கலக்கத்தில் நகை கடைகள்
சென்னை: ஏப்ரல் 1ம் தேதி முதல் தங்கம் வாங்க போகிறவர்கள் இந்த தகவல்களை கண்டிப்பாக தெரிந்து கொண்டு வாங்குங்கள். ஏனெனில் ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களிலும் ஹால்மார்க் முத்திரையுடன் 6 இலக்க தனித்த அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,
ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்கத்தை இனி இந்தியாவில் எந்த நகைக்கடையும் விற்க முடியாது. விற்கவும் கூடாது. அப்படி விற்கும் நகைக்கடைகள் மீது அரசு கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கும் என அறிவித்துள்ளது.
சரி ஏன் ஹால்மார்க் முத்திரை மற்றும் அதற்கான தனி அடையாள எண் அவசியம் என மத்திய அரசு கருதியது? தங்க விற்பனையில் அரசு கொண்டுவந்துள்ள திட்டம் பற்றி விவரமாக பார்ப்போம்.

இந்தியாவில் எவ்வளவு
உலகத்திலேயே அதிக தங்கம் வாங்கும் மக்கள் உள்ள நாடுகளை பட்டியல் எடுத்தால் இந்தியா அதில் நிச்சயம் முன்னணி இடத்தை பிடிக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு தங்கத்தை தங்கள் கலாச்சாரமாகவும் வாழ்வியலின் அங்கமாகவும் இந்திய மக்கள் பார்க்கிறார்கள். இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 1½ கோடி நகைகள் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 18 கோடி நகைகள் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு விஷேசத்திற்கும் தங்கம் தான் பிரதானமாக இருக்கிறது. தங்கம் முதலீடு சார்ந்தும் இந்தியாவில் அதிகமாக வாங்கப்படுகிறது.

ஹால்மார்க்
அப்படி வாங்கப்படும் தங்கம் தரமானதாக இருக்க வேண்டும் அல்லவா? அதற்கு தான் மத்திய அரசு தர நிர்ணயத்தை வரையறுத்துள்ளது. தரமான தங்க நகைகள் என்றால் தங்கத்தின் தூய்மைக்கான சான்றிதழாக ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது நகை கடைகளில் 4 இலக்க ஹால் மார்க் எண் கொண்ட நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே தரமான தங்க நகைகளை விற்பனை செய்யும் வகையில் தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

தனி அடையாள எண்
ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களிலும் ஹால்மார்க் முத்திரையுடன் 6 இலக்க தனித்த அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நகையின் மதிப்பை போல 5 மடங்கு அபராதம் அல்லது ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அடையாள எண்
தற்போது 4, 6 இலக்கங்களில் ஹால்மார்க் அடையாள எண் வழங்கப்படுகிறது. ஆனால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் 6 இலக்க அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. எனவே 4 இலக்க ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு தங்க நகை விற்பனையாளர்கள் மற்றும் நகை வாங்கும் பொதுமக்கள் கலக்கம் அடைய வைத்துள்ளது.

குற்றச்சாட்டு
அதேநேரம் 6 இலக்க எண் கொண்ட தங்க நகைகளை மட்டும் தான் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விற்க வேண்டும் என்ற முடிவினை, தங்க நகை விற்பனையாளர்களின் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் குற்றச்சாட்டுகிறார்கள். நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "மத்திய அரசு தான் ஏற்கனவே 4 இலக்க ஹால்மார்க் குறியீட்டை வழங்கி இருந்தது. அதை பின்பற்றி தான் நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது 6 இலக்க குறியீடு உள்ள நகைகளை தான் விற்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதை எப்படி உடனடியாக அமல்படுத்த முடியும். குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது காலஅவகாசம் தந்திருக்க வேண்டும். இதுபற்றி எங்கள் கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவித்தோம். ஆனால் கோரிக்கை ஏற்கப்படவில்லை" என்று கூறினார்.

வாடிக்கையாளர்கள்
இதனிடையே 4 இலக்க நகைகளை திரும்ப பெற்று முத்திரை வைத்து கொடுக்க வேண்டுமா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனறு நகை கடை உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் ஒரு நகைக்கு ஹால்மார்க் பெற 6 மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்றும் அதோடு ஹால்மார்க் பெற கூடுலாக வாடிக்கையாளர்கள் ரூ.106.20 செலவு செய்ய வேண்டும் என்றும் நகை கடை உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

பாதிக்கும்
மேலும் கடைகளில் உள்ள அனைத்து நகைகளையும் உடனடியாக கணக்கெடுத்து ஹால்மார்க் பெறுவது என்பது சாத்தியம் இல்லை என்றும் கடைகளை மொத்தமாக மூடிவிட்டுத்தான் ஹால்மார்க் முத்திரைகளை பதிக்க வேண்டும் என்றும் எனவே நகை தொழில் மற்றும் விற்பனை பெரிய அளவில் இந்த அறிவிப்பு பாதிக்கும் என்றும் நகை விற்பனையாளர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications