சிஎம் வீடு முன் போராடிவிட்டு.. போலி முகவரி தந்து எஸ்கேப் ஆக பார்த்த ஏபிவிபி நிர்வாகிகள்? பாயும் கேஸ்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வீடு முன் போராடி கைதான ஏபிவிபி அமைப்பினரில் சிலர் பொய்யான விலாசம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு நாடு முழுக்க கவனம் பெற தொடங்கி உள்ளது. இந்த தற்கொலைக்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு இடங்களில் ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முதல்நாள் ஏபிவிபி அமைப்பினர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அங்கு இருக்கும் தமிழ்நாடு இல்லம் முன் மொத்தமாக கூடி போராட்டம் நடத்தினர். இதனால் டெல்லியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு போராட்டம்
முன்னதாக அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு இவர்கள் முதல்வர் ஸ்டாலின் வீட்டு வாசல் முன் போராட்டம் நடத்தி உள்ளனர். ஏபிவிபி அமைப்பை சேர்ந்த பலர் மொத்தமாக திரண்டு வந்து முதல்வர் வீட்டு வாசல் முன் காவி கொடியை ஏந்தி போராட்டம் செய்தனர். மாணவியின் பெயரை சொல்லி அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர். திடீரென முதல்வர் வீடு முன் ஏபிவிபி அமைப்பினர் இப்படி போரட்டம் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ்
இதையடுத்து முதல்வர் வீடு முன் போராட்டம் நடத்திய 32 பேர் நேற்று தமிழ்நாடு போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். இதில் 3 பேர் மைனர் என்பதால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். ஏபிவிபி அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் நிதி திரிப்பாதியும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீதம் உள்ள 29 பேரையும் 2022 பிப்ரவரி 28 வரை காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

பெயில்
இந்த நிலையில் இவர்கள் பெயில் வழக்கு மீது இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. சென்னை மேஜிஸ்டிரேட் கோர்ட் முன் இவர்கள் பெயில் வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் வீடு முன் போராடி கைதான ஏபிவிபி அமைப்பினரில் சிலர் பொய்யான விலாசம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. 32 பேர் போராடிய நிலையில் 12 பேர் பொய்யான விலாசத்தை கொடுத்து இருப்பதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணையில் விலாசம் கேட்ட போது இவர்கள் பொய்யான விலாசத்தை கொடுத்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் ஏபிவிபி மாணவர்கள் 12 மீது கூடுதலாக இன்னொரு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு இன்று நடக்கும் பெயில் விசாரணையில் நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை கூறவும் போலீஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. விலாசம் பொய்யாக கொடுக்கப்பட்டதை வைத்து பெயிலை மறுக்க வேண்டும் என்று வாதம் வைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications