அரை லிட்டர் பால், 4 கறவை மாடு ஃப்ரீ.. "கட்டிங்" டைமிங்கில் கட்டிங்.. அர்ஜுனமூர்த்தியின் வாக்குறுதி
சென்னை: அர்ஜுன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி ஆட்சிக்கு வந்தால் வீடுதோறும் அரைலிட்டர் பால், 4 கறவை மாடுகள் இலவசமாக தரப்படும் உள்ளிட்ட பல எண்ணற்ற திட்டங்களை தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளார்.
அர்ஜுனமூர்த்தி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவர் கூறுகையில் மாற்றம் மாற்றம் என சொல்லிவிட்டு தேர்தல் அறிக்கையில் மாற்றம் இல்லாவிட்டால் நன்றாக இருக்காது.
தமிழகத்தின் மண்வளம் முக்கியமானது. 60 சதவீதம் விவசாயத்தை நம்பியே இருக்கிறோம். விவசாயிகள்தான் ஏதாவது ஒரு பிரச்சினையால் துன்பப்படுகிறார்கள். மண் வளத்தை கூட்டி விவசாயிகளுக்கு மாற்று வணிகம் வர வேண்டும். சிகரம் தொடும் சிறப்பு திட்டம் என பெயரிட்டுள்ளோம்.

1 லிட்டர் பால்
இந்த திட்டத்திற்கு பெயர் பசுமைப் புரட்சி. பெண்களுக்கு பணம் கொடுப்பதை விட அவர்களின் வீட்டு குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்துடன் வளரவே சந்தோஷப்படுவார்கள். பாலின் மகத்துவத்தை மனதில் வைத்துக் கொண்டு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரையிலான பாலை இலவசமாக வழங்கப்படும். 4 உறுப்பினர்கள் உள்ள குடும்பத்திற்கு 500 மில்லியும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு 1 லிட்டரும் வழங்கப்படும்.

அரை ஏக்கர் புறம்போக்கு நிலம்
இது எப்படி சாத்தியம் என நீங்கள் கேட்கலாம். 4 நாட்டு இன மாடுகளை அரசால் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த மாடுகளுக்கான தீவன பராமரிப்பு செலவையும் அரசே ஏற்கும். இதற்காக அரை ஏக்கர் புறம்போக்கு நிலம் குத்தகையில் வழங்கப்படும். இந்த திட்டத்தால் மண் வளம் பெற்று இயற்கை விவசாயம் செழிக்கும்.

பெட்ரோல் கார்டு
அடுத்தது எங்களுடைய 5 ஸ்டார் திட்டங்கள். தமிழக அரசு நிர்வாகம் செய்ய வசதியாக 4 மண்டலங்களாக பிரிக்கப்படும். ஒரு மண்டலத்திற்கு ஒரு துணை முதல்வர் என்ற வீதத்தில் 4 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள். பட்டியலினத்தவர், மைனாரிட்டி சமூகத்தவர், பெண், அறிவு திறனுடைய ஒருவர் என 4 பேர் துணை முதல்வர்களாக நியமிக்கப்படுவார்கள்.
பணியாளர் மேம்பாட்டு பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. பள்ளி, கல்லூரியை தவறவிட்டவர்கள் இதில் பயிலலாம். 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம். கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும். அடுத்தது பெட்ரோல் கார்டு திட்டம்- மாணவ மாணவிகளுக்கு பெட்ரோல் கார்டு, மாநில விற்பனை வரி விலக்கு அளிக்கப்படும் தொகை மாத இறுதியில் மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே இந்த பெட்ரோல் கார்டு.

விவசாயப் பாடம்
விவசாயக் கல்வி கட்டாயம் என்பது ஒரு திட்டம். 10ஆம் வகுப்பு வரை விவசாய பாடம் கட்டாயம். நவீன விவசாயம் பற்றிய அடிப்படை அறிவு , பிற நாடுகளில் விவசாய அறிவை பகிர்ந்து கொள்ளுதல். அடுத்தது நல்லோர் அரசு குடியிருப்பு -இது முக்கியமான ஒரு திட்டம், நல்லவர்கள் அரசியலிலும் பொது பணியிலும் இருக்கிறார்கள். அவர்கள் குடியிருக்க வசதிகள் செய்து தரப்படும். மாவட்டந்தோறும் நல்லோர் குடியிருப்புகள் உருவாக்கப்படும். இந்த குடியிருப்பில் 3 வேளை இலவச உணவு அளிக்கப்படும். உடற்பயிற்சி மையம், பல்பொருள் அங்காடி, மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்படும்.

நல்ல விளைச்சல்
அடுத்தது மாற்றத்திற்கான திட்டங்கள்: உழவர் உயர்வு- இந்த திட்டத்தில் மண் வளத்தை பரிசோதனை செய்ய இலவச ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும். விவசாயத்திற்கு தேவையான உரம், விதை ஆகியவற்றை அரசே வழங்கும். அடுத்தது ஸ்மார்ட் விவசாயம்- இது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் இடத்தில் கூட நல்ல விளைச்சல் கிடைக்கும். அடுத்தது உழவர் உதவித் தொகை- ஏழை விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் மாதம் 5000 வீதம் ஆண்டுக்கு 3 முறை வழங்கப்படும்.

மகளிருக்கு பாதுகாப்பு
மகளிர் நலன்- வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து வசதி. மகளிருக்கு பாதுகாப்பான மகிழ்வான பயணத்தை உறுதி செய்வோம். புறநகர் ரயில் பயணமும் இலவசமாக வழங்கப்படும். பணியிடங்களில் பெண்களுக்கு கட்டாய ஓய்வறை. இரவு நேரங்களில் பெண்கள் பேருந்துகளில் பாதுகாப்பாக பயணம் செய்ய ரயில்வே போலீஸ் மாதிரி, டிரான்ஸ்போர்ட் போலீஸ் என்ற துறையை உருவாக்க வேண்டும்.

மகப்பேறு மருத்துவம்
மாத வருமானம் 20 ஆயிரத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே மகப்பேறு மருத்துவம் , மருந்து, ஊட்டச்சத்து இலவசம். உயர்தர சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படும். கர்ப்பப்பை சார்ந்த நோய்களுக்கு இலவச சிகிச்சை. குழந்தைகளுக்கு அனைத்து வகை தடுப்பூசிகளும் இலவசம். 9 மாதத்திலிருந்து 9 வயது வரை சாப்பீடு வசதி, கல்வி, சுகாதார வசதி இலவசமாக செய்து கொடுப்போம். நுகர்பொருள் வாங்குவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி கூப்பன் இலவசம். ஒற்றை தாய்மார்களுக்கு ரூ 1000 உதவி பராமரிப்புத் தொகை வழங்கப்படும். ரூ 30 ஆயிரத்திற்கு கீழ் ஊதியம் வாங்கும் பத்திரிகையாளர்களுக்கு நுகர்பொருள் வாங்கும் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி. இதை முதல் கையெழுத்தாக போடுவேன். பத்திரிகையாளர்களுக்கும் நல்லோர் குடியிருப்பு உண்டு.

விளையாட்டு
இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு- சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம். மாவட்டந்தோறும் 50 ஏக்கர் பரப்பில் உருவாகும் அதிநவீன வளாகம். மாணவர்களுக்கு ஈ மார்க்கெட் கார்டு ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க வசதி. வருமானம் பெருக இரட்டை வேலைவாய்ப்புத் திட்டம், எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு சந்தை. பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை தான் டாஸ்மாக் விற்பனை நேரம் என மாற்றியமைப்போம்.

செட்டிநாடு தனி மாவட்டம்
செட்டிநாடு மாவட்டம் என தனி மாவட்டம் அமைக்கப்படும், இது செட்டிநாடு மக்களின் கலாச்சார பிரதிபலிப்பாக இருக்கும். 50 யூனிட் இலவச மின்சாரம் அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார். இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியினரின் அடையாளங்கள் காணொலி மூலம் வெளியாகின. அதில் கறையற்றவர்கள் என்பதால் வேட்டியில் வண்ணக்கரை இருக்காது என தெரிவிக்கப்பட்டு லஞ்சம், நிலமோசடி, கட்டப்பஞ்சாயத்து, வன்முறை உள்ளிட்ட இனி இருக்காது 100 சதவீதம் மக்கள் மீது அக்கறையின் அடையாளமாக இருக்கும் என விளக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications