செந்தில் பாலாஜியை எத்தனை பேர் பார்க்கலாம்..சிறைத்துறை விதிகள் என்ன சொல்லுது? சட்ட அமைச்சர் விளக்கம்
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒருநாளைக்கு எத்தனை பேர் பார்க்கலாம், சிறைத்துறை விதிகள் என்ன? என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிரார். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று விசரணை நடத்தினார். இதையடுத்து, 28-ம்தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, செந்தில்பாலாஜிக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை நேற்று இரவு முதல் தமிழக சிறைத்துறை எடுத்துக்கொண்டது. புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விசாரணை கைதி எண் 001440 ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கமான நடைமுறையின் படி விசாரணைக் கைதி எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
செந்தில் பாலாஜி நேற்று இரவுதான் சிறைத்துறை அட்மிஷனுக்கு வந்து இருக்கிறார். சிறைத்துறை விதிப்படி ஒருவரை மூன்று பேர் தான் ஒருநாளைக்கு பார்க்க முடியும். அதுதான் முறை. அந்த முறையின் அடிப்படையில் சிறைத்துறை நடந்து கொள்ளும். உறவினர்கள் பார்க்கலாம். வழக்கறிஞர்கள் பார்க்கலாம். சட்டப்போராட்டம் மூலமாக நல்ல தீர்ப்பை பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
டி.ஆர் பாலு வழக்கில் அண்ணாமலை ஆஜராக நீதிமன்றம் சம்மன் விடுத்தது பற்றி கேட்கிறீர்கள். இதில் என்ன இருக்கு.. ஆஜர் ஆக சொன்னால் ஆஜராகவேண்டியதுதானே.. எல்லோருக்கும் சட்டம் ஒன்றுதான். அமலாக்கத்துறை நடந்து கொண்ட விதம் ஜனநாயக படுகொலை. முழுக்க முழுக்க மனித உரிமை மீறிய செயல் என்று முதலில் நான் தான் சொன்னேன். ஒரு மனிதனை ஏறக்குறைய 17 மணி நேரம் துன்புறுத்துவது துயரப்படுத்துவது என்பது சட்டத்தில் இல்லாத ஒன்று.
அவருக்கு ஓய்வு கொடுத்து இருக்க வேண்டும். கொடுக்கவில்லை. நெஞ்சுவலி வருவதற்கு அடிப்படை காரணமே அமலாக்கத்துறை நடந்து கொண்ட விதம் தான் என்று முதல்வரும் தெளிவாக சொல்லியிருக்கிறார். எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்காலத்தில் நடக்கக் கூடாது என்பதற்காக சிபிஐக்காக நாங்கள் கொடுத்து இருந்த பொது அனுமதியை வாபஸ் பெற்று இருக்கிறோம். 9 மாநிலங்களில் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. 10-வது மாநிலமாக தமிழ்நாடும் அதை விலக்கி கொண்டுள்ளது" என்றார்.
கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை தன்னுடைய சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளவும் ரகசியங்களை சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத்தான். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தது குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, அது பழனிசாமியின் புத்தி அப்படிப்பட்டது.
அதுக்கு நாங்க என்ன பண்ன முடியும். உடல்நிலை சரியில்லாமல் செந்தில் பாலாஜி இருக்கிறார். பக்கத்தில் டாக்டர் இருக்கிறார். எல்லோரும் இருக்காங்க. ரகசியம் பேசவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தோனுமோ அதுதான் தோன்றும். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை மூலம் கொடுமைப்படுத்தினால் மற்றவர்களும் பயப்படுவார்கள் என நினைக்கிறார்கள். திமுக எதற்கும் பயப்படாது என்று பாஜகவிற்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications