விளவங்கோடு தொகுதி காலி: தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்! லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு
சென்னை: விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக சட்டசபை செயலர் சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார். எனவே மக்களவைத் தேர்தலோடு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதரணி. தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் முதன்மை கொறடா, காங்கிரஸ் அகில இந்திய மகளிரணி அணி பொறுப்பு உள்ளிட்ட பதவிகளில் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் கடந்த சனிக்கிழமையன்று பாஜகவில் இணைந்தார்.

விஜயதரணி கட்சி மாறியதன் காரணமாக, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை பாயும். அதன்படி, அவர் தனது எம்.எல்.ஏ பதவியை இழப்பார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் விஜயதரணி இணைந்த நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகர் அப்பாவுவிற்கும், சட்டப்பேரவை செயலாளருக்கும் கடிதம் அனுப்பினார். அதில், விஜயதரணி எம்.எல்.ஏ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், பாஜகவில் இணைந்துள்ளார். அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம்செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதேபோல், விஜயதரணியும் சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். பாரதிய ஜனதா கட்சியில் தான் இணைந்து கொண்டதாகவும், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகவும் சட்டமன்ற விதி 21 படிவம்-எப் மூலம், ராஜினாமா கடிதத்தை தமது கைப்பட எழுதி சபாநாயகருக்கும், சட்டசபை முதன்மைச் செயலாளருக்கும் விஜயதரணி அனுப்பினார்.
தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்: இதையடுத்து, விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலர் சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார். பாஜகவில் இணைந்த விஜயதரணி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு, குற்ற வழக்கில் தண்டனை விதித்து ஐகோர்ட் தீர்ப்பளித்ததால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோகும் சூழலில், அவர் எம்.எல்.ஏவாக இருக்கும் திருக்கோவிலூர் தொகுதி தொடர்பான விவகாரம் சபாநாயகரின் பரிசீலனையில் உள்ளதாகவும், சட்டசபை செயலர், தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இடைத்தேர்தல்: தமிழ்நாடு சட்டசபை செயலர் சீனிவாசன், விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளதை அடுத்து, விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். ஒரு தொகுதி காலியானால், 6 மாதத்துக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். விரைவில் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மக்களவைத் தேர்தலோடு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications