இந்தியாவில் இளையோர் ஒலிம்பிக் போட்டி நடத்த முயற்சி! எந்த ஆண்டு தெரியுமா? அனுராக் தாகூர் சொன்ன தகவல்
சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவில் இளையோர் ஒலிம்பிக் போட்டி நடத்த பிரதமர் மோடி முன்னெடுப்பு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை சென்னையில் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். இன்று மாலை சென்னை விமான நிலையம் வந்த அவரை தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர். இதனை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் மோடி காரில் வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடிக்கு வழிநெடுகில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், கேலோ இந்தியா இளைஞர் போட்டிக்கான துவக்க விழா தேசிய கீதத்துடன் தொடங்கியது. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
இந்த விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவில் இளையோர் ஒலிம்பிக் போட்டி நடத்த பிரதமர் மோடி முன்னெடுப்பு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது:- வணக்கம் சென்னை.. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை புரிந்ததற்கு கேலோ போட்டி தான் அடித்தளமாக அமைந்தது.
2030ம் ஆண்டில் இந்தியாவில் இளையோர் ஒலிம்பிக் போட்டி நடத்த பிரதமர் மோடி முன்னெடுப்புகளை செய்து வருகிறார். விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா போன்ற செஸ் சாம்பியன்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். கேலோ இந்தியா விளையாட்டுக்கான நிதியானது தற்போது 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications