தவெக ஆட்சியை கவிழ்க்க மேலும் ஒரு எம்.எல்.ஏவிடம் நடந்த பேரம்? - கைதான நபர் அதிர்ச்சி வாக்குமூலம்!
சென்னை: விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க மேலும் ஒரு எம்எல்ஏவை இழுக்க முயற்சி நடைபெற்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கைதான நபர் அளித்த வாக்குமூலத்தில் உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் நடத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம், தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஒத்துழைக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அவர் அளித்த புகாரின் பேரில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் நபர்கள் உள்ளிட்ட 11 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேசன் (41) 12வது நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், சபாநாயகர் தொடர்பான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, உசிலம்பட்டி தொகுதியைச் சேர்ந்த தவெக எம்எல்ஏவை தவெகவுக்கு எதிராக வாக்களிக்க வைக்க, அவருக்கு நெருக்கமான நபர் மூலம் பேரம் பேச முயற்சி நடைபெற்றதாக கணேசன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏவிடம் கணேசன் மூலம் திருநாவுக்கரசு பேரம் பேச முயற்சித்ததாகவும் அப்போது ரெக்கார்ட் செய்யப்பட்ட ஆடியோ ஆதாரத்தை போலீசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெகவில் இணைய விரும்புவதாக அறிமுகம் செய்துகொண்டு, மதுரையில் வைத்து அந்த எம்.எல்.ஏவை கணேசன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு எம்.எல்.ஏவிற்கும் 35 கோடி முதல் 50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கணேசனை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ள போலீசார், இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இந்த பேரம் நடைபெற்றதாக கைது செய்யப்பட்ட சிலர் கூறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய நிலையில், செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் என் பெயரும், சகோதரர் பெயரும் இல்லை. அப்படி இருக்கையில் எங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது ஏன்? இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு சட்டரீதியாக பதில் அளிப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications